×

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் 62 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி உள்பட 4 பேர் சுற்றிவளைப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட காசிமேடு கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக இணை ஆணையர் சாமுண்டீஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் மேற்கண்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து காசிமேடு சுடுகாடு அருகே கைமாற்றும்போது தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை காசிமேடு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரவி என்ற பவுடர் ரவி (54), எண்ணூர் வஉசி நகரை சேர்ந்த கூலிதொழிலாளி பிரசாந்த் (30), திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த லாரி டிரைவர் சம்சுதீன் (48), புதுவண்ணாரப்பேட்டை தனபால் நகரை சேர்ந்த பீரோ ரிப்பேர் செய்யும் குணா என்ற குணசேகரன் (51) என்பது தெரியவந்தது. இவர்களில் பவுடர் ரவி சிறையில் இருந்தபோது, பாலாஜி என்பவர் மூலம் ஆந்திராவில் உள்ள கஞ்சா வியாபாரி அறிமுகமாகியுள்ளார். அவர் மூலம் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. ரவி மீது கொலை, ஏடிஎம் கொள்ளை உள்ளிட்ட 62 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆலந்தூர்: கோடம்பாக்க்கம் டிரஸ்ட் புரம் விளையாட்டு மைதானம் அருகே உள்ள பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்திக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்பேரில் பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் நோட்டமிட்டபோது விளையாட்டு திடலில் உள்ள இளைஞர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தவரை பிடித்தனர்.

அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் (35), கஞ்சாவை அங்கிருந்து கொண்டு வந்து கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள மாணவர்கள், இளைஞர்களிடம் விற்று வந்ததாக தெரிவித்தார். போலீசார் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து 6 கிலோ கஞ்சாவை மீட்டனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் 62 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி உள்பட 4 பேர் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thandaiyarpet ,Andhra ,Kasimedu Korukuppet ,Tiruvotiyur ,Vannarpet ,
× RELATED திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை...