×

வேடசந்தூர் அருகே 17ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மழை மானி கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் வேடசந்தூர்-ஈசநத்தம் ரோட்டில் சங்கர்னாபட்டி அருகில் உள்ள குளக்கரையில் திண்டுக்கல் வரலாற்று ஆய்வு குழுவின் விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பழங்கால நடுகல், மழைமானி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்விற்குபின் அவர்கள் கூறுகையில், ‘‘நடுகல்லில் வீரனின் கொண்டை இடது புறம் சரிந்தும் மீசை முறுக்கியபடியும் கழுத்தில் நெஞ்சணி ஆரமும் வலது கை மழுவை ஊன்றிய நிலையிலும் இடை வாரில் குறு வாளும் இடைக் கச்சையும் அதன் மேல் உதர பந்தமும் காலில் தண்டை உடன் நிற்கிறார்.

அவரின் மனைவி கொண்டை இடது புறம் சரிந்தும் கொண்டையிலிருந்து கெண்டைக்கால் வரை திரை சேலை மாலை போல் தொங்கிய நிலையும் காதுகளில் வளையமும் நெஞ்சில் பதக்கமும் வலது கையில் தீ பந்தமும் இடைக்கச்சை ஆடை கெண்டைக்கால் வரை சுருள் ஆடையும் இடது கையில் மது குடுவையும் உள்ளது. வீரன் இறந்துபட்டதும் வீரனுடன் உடன் கட்டை ஏறினாள்.
முறுக்கிய மீசையும் காதில் குண்டலமும் இடது புறம் சரிந்த கொண்டையும் நெற்றியில் தலை முடியோடு சேர்த்த கிரீடமும் கழுத்தில் நெஞ்சணி ஆரமும் மார்பில் சன்ன வீரமும் இரு தோளில் பீதாம்பரமும் வலது கையில் வேலும் இடது கையில் வில்லும் இரு தோளில் லாகு வளையமும் கழுத்தை சுற்றி தோள் வழியே குரங்கு சொறி என்னும் மாலையும் வலது கைக்கு கீழே பசுவும் இடையில் உதரபந்தமும் இடைவாரில் குறு வாளும் இடைக் கச்சை சுருக்கத்துடன் முழங்கால் வரை வலது கை ஓரம் அம்பார துணி உள்ளது.

இவ்வீரன் போர் கலையில் திறமையாக இருப்பான். இவ்விரு நடுகல் சிற்பமும் 17ம் நூற்றாண்டை சேர்ந்தது. அக்கால கிராமங்களில் மாடு வளர்ப்பவர்கள் தம் தேவை போக சிறிதளவு பாலை பிள்ளை பால் என்று ஊர் கோவில் அல்லது ஊர் சாவடி அருகில் ஒரு அடி குழி உள்ள சதுர கல்லில் ஊற்றுவர். இதை ஆடு மாடு இல்லாத மக்கள் தம் குழந்தைகளுக்கு எடுத்து செல்வர்.
இப்பால் கல் தொட்டி ஒன்று உள்ளது. அக்கால மக்கள் இதை தர்மமாக செய்தனர். அதில் இருந்து சிறிது தொலைவில் பழங்காலத்தில் மழை அளவை குறிக்கும் கல் மழைமானி ஒன்று உள்ளது. இம்மழைமானி செம்பாறை கல்லால் ஆனது. இம்மழைமானி ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. நடுகல்கள் தற்போது வழிபாட்டில் உள்ளது’’ என தெரிவித்தனர்.

The post வேடசந்தூர் அருகே 17ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedasantur ,Nugal ,Vedasanthur ,Dinakaran ,
× RELATED ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.54 கோடி பறிமுதல்