×

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இம்பாலில் ஐந்து வீடுகள் தீ வைத்து எரிப்பு.. மர்மநபர்கள் அட்டூழியம்..!!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வீடுகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து மீண்டும் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த வன்முறை பாதுகாப்பு படையினரின் கடும் நடவடிக்கைகளுக்கு பிறகு சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பால் நியூ செகோன் பகுதியில் ஆளில்லா 3 வீடுகளை நேற்று மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை பார்த்து அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். பதற்றம் அதிகரித்துள்ளதால் ராணுவத்தினரும் நியூ லம்புலேன் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இம்பால் மேற்கு மாவட்டம் சகோல்பான் என்ற இடத்தில் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு காவலுக்கு இருந்த பாதுகாப்பு வீரர்களிடம் ஒரு கும்பல் 3 ஆயுதங்களை பறித்து சென்றுள்ளது. இந்த கும்பல் மாநிலத்தில் எங்காவது வன்முறையை அரங்கேற்றலாம் என்று ராணுவத்தினர் அஞ்சுவதால் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பழங்குடியினர் மற்றும் மாணவர்களிடம் நிதானபோக்கை கடைபிடிக்குமாறு காவல்துறையினரை உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார். மணிப்பூர் நிலவரம் குறித்து டெல்லியில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், பழங்குடியினர் விவகாரத்தில் போலீசார் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

The post மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இம்பாலில் ஐந்து வீடுகள் தீ வைத்து எரிப்பு.. மர்மநபர்கள் அட்டூழியம்..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 70 வீடு,...