×

வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை சரிவு: வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.400 முதல் விற்பனை

ஈரோடு,ஆக.28: ஈரோடு மீன் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால், மீன்கள் விலை குறைந்தது. இதில், வஞ்சரம் மீன் ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.800 வரை விற்பனையானது. ஈரோடு ஈவிஎன் சாலையில் ஸ்டோனி பிரிட்ஜ் அருகே மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு ராமேஸ்வரம்,காரைக்கால்,நாகப்பட்டினம்,தூத்துத்துக்குடி மற்றும் கேரளா மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்களும்,பல்வேறு பகுதிகளில் இருந்து டேம் மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அதிகளவில் நடைபெறும். கடந்த சில வாரங்களாக ஆடி மாதம் காரணமாக மீன்கள் விற்பனை மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில், ஆடி மாத நிறைவையொட்டி ஈரோடு மீன் மார்க்கெட்டிற்கு தமிழக கடல் பகுதிகளில் இருந்து 16 டன் அளவிற்கு மீன்கள் விற்பனைக்கு வரத்தானது. மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், நேற்று மீன்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. இதனால், மீன் மார்க்கெட்டில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு பிடித்த மீன் வகைகளை வாங்கி சென்றனர்.

இதில், கடந்த வாரம் ரூ.1200க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் நேற்று ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை நிலவரம்(கிலோவில்):அயிலை-ரூ.300, மத்தி-ரூ.250, விள மீன்-ரூ.450, தேங்காய் பாறை-ரூ.450, பொட்டு நண்டு-ரூ.350, ப்ளூ நண்டு-ரூ.500, இறால்-ரூ.650,சிறிய இறால்-ரூ.500, சீலா-ரூ.350,வெள்ளை வாவல்-ரூ.600, கருப்பு வாவல்-ரூ.500,பாறை-ரூ.300, கிளி மீன்-ரூ.500, மயில் மீன்-ரூ.600, திருக்கை-ரூ.300, நெத்திலி-ரூ.250,சூரி-ரூ.300, கடுவா-ரூ.350 ஆகிய விலைகளில் விற்பனையானது. கடந்த வாரத்தை விட அனைத்து மீன்களும் கிலோவுக்கு ரூ.50முதல் ரூ.150 வரை குறைந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை சரிவு: வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.400 முதல் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vanjaram ,Erode ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...