×

சென்னையில் நாளை சவர தொழிலாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை: ‘‘சவர தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 29ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்று தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர். தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் எம்.முனுசாமி, பொதுச்செயலாளர் டி.கே.ராஜா பொருளாளர் எஸ்.நடராசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், வருகிற 29ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்கி அரசு வேலை வாய்ப்புகளிலும் தனி இடஒதுக்கீடு வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து கோயில்களிலும் உள்ள தலைமுடி எடுக்கும் தொழிலாளர்களை, தவில், நாதஸ்வர இசைக்கலைஞர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சலூன் கடை வைக்க லைசன்ஸ், தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும். முடிதிருத்துவோர் நல வாரியத்திற்கு மருத்துவர் சமுதாயத்தை சார்ந்தவரை தலைவராக்க வேண்டும்.

நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசு சிறப்பு சலுகை வழங்க வேண்டும். கிராமம், நகர்ப்புற தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இடம் உள்ளவர்களுக்கு இலவச வீடுகளை கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அன்று ஒருநாள் மட்டும் கடைகளுக்கு விடுமுறைவிட்டு குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.

The post சென்னையில் நாளை சவர தொழிலாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sawara ,union ,Chennai ,Tamil ,Nadu ,Savara ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை