×

மதுரை பேரையூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை ரூ.8.20 லட்சத்திற்கு விற்பனை

* தாய் உள்பட 5 பேர் அதிரடி கைது
* 24 மணி நேரத்தில் பிடித்தது போலீஸ்

மதுரை: பேரையூரில் 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8.20 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக சிறுமியின் தாயார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, 24 மணி நேரத்தில் பெங்களூருவில் இருந்து குழந்தையையும் மீட்டனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கர்ப்பமான நிலையில், பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த 7ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் சிறுமியை, டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்த சிறுமி கடந்த 12ம் தேதி குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து மருத்துவமனை உயரதிகாரிகள் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் காந்திமதி, சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது குழந்தை சிறுமியின் தாயாரிடம் இருப்பதாக கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த காந்திமதி இதுகுறித்து நேற்று முன்தினம் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொர்பாக பேரையூர் இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு: சிறுமியின் தாயார், மெய்யனூத்தம்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (48) என்பவருடன் இணைந்து குழந்தையை விற்க முயற்சித்துள்ளார். சுந்தரலிங்கம் மீது மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இவருக்கு உதவியாக இருக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் தாமரைச்செல்வன் (50) என்பவரிடம், இதுகுறித்து சுந்தரலிங்கம் பேசியுள்ளார். அவர் தனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரிடம் குழந்தையை விற்கும்படி கூறியுள்ளார்.

இதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள பெரிய புலியூத்தைச் சேர்ந்த கார்த்திக் (28) (இவர் மீது ஏற்கனவே குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன) என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவரது உதவியுடன் பெங்களூருவில் வசிக்கும் கார்த்திக் (35), சீனிவாசன் (35) ஆகியோர் மூலமாக, அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஜேஸ்வரி (36) என்பவரிடம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்திற்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இந்த தகவல்களை உறுதி செய்த போலீசார், சிறுமியின் தாயார் மற்றும் சுந்தரலிங்கம், பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக், சீனிவாசன், தேஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர்.

தேஜேஸ்வரியிடம் இருந்து குழந்தையை மீட்டு, அதன் தாயாரான சிறுமியுடன் மதுரையிலுள்ள காப்பத்தில் சேர்த்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய உசிலம்பட்டி வழக்கறிஞர் தாமரைச்செல்வன், ஈரோடு கார்த்திக் மற்றும் நர்ஸ் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். குழந்தை விற்பனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில் குழந்தையைக் கைப்பற்றியதுடன், குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை எஸ்.பி சிவபிரசாத் பாராட்டினார்.

The post மதுரை பேரையூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை ரூ.8.20 லட்சத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Madurai Periyur Government Hospital ,Madurai ,Peraiyur ,Peraiyur government hospital ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை