×

5 டோல் கேட்களில் மட்டும் ₹132 கோடி முறைகேடு; பரனூர் சுங்கசாவடியில் ரூ.6.5 கோடி சுருட்டல்: பாஜ அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவாரூர்: நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடிகளில் ஐந்து சுங்கச்சாவடிகளில் மட்டும் 132 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் 6.5 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது என்று பாஜக அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் மகள் திருமண விழா திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் இன்று நடைபெற்றது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி ேபசியதாவது:
செல்வராஜ் 48 ஆண்டுகளாக அவர் சார்ந்த இயக்கத்திற்கு உழைத்துக்கொண்டு இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் திமுகவுக்கும் எப்போதும் நட்பு, அன்பு உண்டு. கலைஞர் எப்போதும் பெருமையாக சொல்வார். பெரியார், அண்ணாவை சந்திக்காவிட்டால் கம்யூனிஸ்டாக இருந்திருப்பேன் என்று. நமது கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. நட்பு ரீதியாகவும் கொள்கை அடிப்படையிலும் அமைக்கப்பட்ட கூட்டணி. நாடளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று அறிவிக்கிறேன்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். சர்வாதிகாரம், பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நடைபெறும் தேர்தல். தமிழகத்தை காப்பாற்றி விட்டோம். அதைப்போல், இந்தியாவையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தான் ‘இந்தியா கூட்டணி’ அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்தினோம். தொடர்ந்து, பெங்களுரூவில் 2வது கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தான் இந்தியா கூட்டணி பெயர் அறிவித்தோம். வரும் 31ம் தேதி, செப்.1 ஆகிய தேதிகளில் மும்பையில் 3வது கூட்டம் நடக்கிறது. அதில் நானும் கலந்து கொள்கிறேன். மும்பை கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக பாஜ ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. ஆனால் 9 ஆண்டுகளாக நாங்கள் மக்களுக்கு நன்மை செய்திருக்கிறோம் என எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் வெளிநாடுகளில் இருக்க கூடிய கருப்பு பணத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டு வருவோம். ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்போம் என்று அறிவித்தனர். 15 ரூபாயாவது கொடுத்தார்களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என உறுதி அளித்தனர். ஆனால், இருந்த வேலை பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஒன்றிய ஆட்சியின் நிலை. மதகலவரத்தை ஏற்படுத்தி, மதத்தை வைத்து நாட்டை இரண்டாக ஆக்க கூடிய ஆட்சி நடக்கிறது. இது பற்றி இந்தியா கூட்டணியில் பேச உள்ளோம். இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும். இந்தியா கூட்டணி அமைந்தததால் அதை மோடியால், தாங்க முடியவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரை ஸ்ட்ராங் கூட்டணி, வலுவான கூட்டணியை திமுக வழி நடத்தி வருகிறது. தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகித்துள்ளதால் மோடிக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. எங்கு போனாலும், சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், வெளிநாடு நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்தியா கூட்டணியை கொச்சைப்படுத்தி பேசுகிறார். திமுகவை பற்றி பேசாமல் அவரால் இருக்க முடியவில்லை.

ஊழலை பற்றி பேச மோடிக்கு அருகதை உண்டா? அரசின் செலவுகள் குறித்த ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பது தான் சிஏஜியின் பணியாகும். அந்த அமைப்பை பாஜ ஊழல் ஆட்சி என தெரிவித்து ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. சிஏஜி தான் சொல்கிறது. முக்கியமாக, 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாரத மாதா திட்டம், துவாராக விரைவு பாதை கட்டுமான திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், எச்ஏஎல் விமான வடிவமைப்பு திட்டம். இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று எடுத்துச் சொல்லியிருக்கிறது. நிதியை கையாள்வதில் மோசடிகள் அரங்கேறி இருக்கிறது என இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

அதாவது, ஆயூஷ்மான் பாரத திட்டத்தில் செல்போனின் போலி நம்பர் 99999-99999 என்ற நம்பரில் 7.5 லட்சம் பயனனாளிகள் இணைக்கப்பட்டு ஊழல் நடந்திருக்கிறது. ஆயுஷ்மான் பாரத திட்டத்திற்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் 88 ஆயிரத்து 760 பேர் இறந்து விட்டனர். இறந்த பிறகும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லி 2 லட்சத்து 14 ஆயிரம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. செத்துபோனவங்களுக்கு காப்பீடு தொகை வழங்கியுள்ளனர். தகுதியில்லாத குடும்பங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு, சுமார் 22 கோடியே 44 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. இந்தியா கூட்டணி சொல்லவில்லை. சிஏஜி சொல்கிறது.

துவாகரா விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18 கோடி இருந்த செலவு ரூ.250 கோடி என அதிகரித்துள்ளது. திட்ட மதிப்பை விட 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தில் விதிமுறைகளை மீறி ஒப்பந்தாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் தரப்பட்டுள்ளது இதனால் அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 600 சுங்கச்சாவடிகளில், 5 சுங்கசாவடிகளை சிஏஜி ஆய்வு செய்தது. விதிக்கு புறம்பாக ரூ.132 கோடி 5 லட்சத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் பரனூர் சுங்கச்சாவடியில் ₹6.50 கோடி முறைகேடாக வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி முறைகேடு நடத்திருக்கும் என ஆய்வு சொல்கிறது.

ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஓய்வு ஊதிய பணத்தை எடுத்து, ஒன்றிய அரசு விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளனர். சிஏஜியின் அறிக்கையின்படி ஒன்றிய அரசில் ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழல்கள் பற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகம் கவலைப்படுகிறார். சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கையில், மத்திய ஊழல் கண்காணிப்பு அறிக்கை சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. இதில், ஒன்றிய அமைச்சகங்களில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது தான் போன வருஷம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி உள்ளது. கடந்தாண்டு 1 லட்சத்துக்கு 15 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளது. இதில், உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளது.

இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்று பேசுகிறார்கள், நடிக்கிறார்கள். இவர்கள் நம்மை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை மூலம் மிரட்டுகின்றனர். இதை கண்டு அஞ்சி, ஒடுங்குகிற கட்சி திமுக அல்ல. திமுக பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு அஞ்சாது. எமர்ஜென்சியை பார்த்தோம். எமர்ஜென்சியை எதிர்த்தோம். லஞ்ச லாவண்யங்களை மூடி மறைப்பதற்காக மதவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல இந்தியாவை ஏமாற்ற முடியாது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த தான் ‘இந்தியா கூட்டணி’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post 5 டோல் கேட்களில் மட்டும் ₹132 கோடி முறைகேடு; பரனூர் சுங்கசாவடியில் ரூ.6.5 கோடி சுருட்டல்: பாஜ அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Paranur Sunkasavadi ,Chief Minister of ,Baja ,Govt. ,G.K. Stalin ,Thiruvarur ,Bharanur ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...