×

நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

 

நெல்லிக்குப்பம், ஆக. 27: கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் நிறுத்தத்தில் இருந்து விநாயகர் கோயில் வரை சாலை குறுகலாக உள்ளதால், சரியான முறையில் அளவீடுகள் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல கூட்டமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விரிவாக்க பணியில் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில இளைஞர் எழுச்சி பாசறை துணை செயலாளர் வழக்கறிஞர் குருமூர்த்தி தலைமையில் மாநில நிர்வாகிகள் கல்விச்செல்வன், பேரறிவாளன், தமிழ் ஒளி, ராஜி, அம்பேத், சாந்தகுமார், சதாம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் கடலூர்-பண்ருட்டி சாலை நெல்லிக்குப்பம் ஆலை ரோடு மும்முனை சந்திப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி அவர்கள் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சாலை விரிவாக்க பணிகளையும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியையும் சரியான முறையில் செய்யவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும், என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

The post நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers ,Nellikuppam ,Cuddalore ,Kondur ,Madapattu ,
× RELATED விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...