×

திருமயத்தில் ரூ.2 கோடியில் புதிதாக கட்ட சிதிலமடைந்த நூலகத்தை இடிக்கும் பணி துவக்கம்

திருமயம், ஆக.27: திருமயத்தில் நவீன வசதிகளுடன் புதிய நூலகம் கட்டுவதற்காக சிதிலதடைந்த பழைய நூலகம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகம் அரசு பள்ளிகள், தாலுகா அலுவலகம் வளாகப் பகுதி அருகே உள்ளது. இது 1988ம் ஆண்டு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளது. எனவே தினந்தோறும் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இந்நூலகத்திற்கு புத்தகம் வாசிக்க வந்து செல்கின்றன. இதனிடைய நூலக கட்டிடம் தொடர்ந்து சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் கட்டிடத்தின் சுவர்கள் சேதம் அடைந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெய்து வரும் மழை காரணமாக கட்டிடம் மேலும் மோசம் அடைந்து சுவர்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டி வந்தது. இதனால் மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே நீர்க்கசிவு ஏற்பட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் எதிர்வரும் மாதங்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் கட்டிடத்தின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

இதனிடையே தொடர் மழை பெய்தால் நூலக கட்டிடம் இடிந்து விடும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் திருமயம் நூலக கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனே புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற திருமயம் பகுதி மக்களின் கோரிக்கை தினகரன் நாளிதழில் செய்தியாக வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நூலகத்தை ப.சிதம்பரம் எம்பி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகம் நவீன வசதிகளுடன், தரைத்தளம் மேல் தளத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட ரூ.2கோடி நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் பழைய சேதமடைந்த நூலகம் இடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இது அப்பகுதி வாசகர்கள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் சத்தியமூர்த்தி நகர் போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக நூலகம் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே அங்கு சென்று வாசகர்கள் பயனடையும்படி கேட்டுக் கொண்டனர்.

The post திருமயத்தில் ரூ.2 கோடியில் புதிதாக கட்ட சிதிலமடைந்த நூலகத்தை இடிக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirumayat ,Tirumayam ,Tirumayam.… ,Dinakaran ,
× RELATED திருமயம் பஸ் ஸ்டாண்டில் பூட்டியே...