×

பெரியபாளையம் – சின்னம்பேடு இடையே புதர்மண்டி காணப்படும் ஏரி நீர் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, ஆக. 27: பெரியபாளையம் – சின்னம்பேடு இடையே புதர்மண்டி காணப்படும் ஏரி நீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் – சின்னம்பேடு கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ராள்ளபாடி, ஜி.ஆர்.கண்டிகை, குமரபேட்டை, பனையஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, பூ செடிகள் ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார்கள்.

இவர்களின் தண்ணீர் தேவைக்காக பெரியபாளையம் பாளேஸ்வரம் பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சின்னம்பேடு பெரிய ஏரிக்கு, கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்றனர். தற்போது இந்த கால்வாய் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக புதர்மண்டி தூர்ந்து விட்டது. மேலும் ராள்ளபாடி, பனையஞ்சேரி பகுதிகளிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்பதால், கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கிறது. எனவே, பெரியபாளையம் – சின்னம்பேடு ஏரிக்கு செல்லும் கால்வாய் புதர்கள் சூழ்ந்துள்ளதை அகற்றி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பெரியபாளையம் – பாளேஸ்வரம் பகுதியில் இருந்து சின்னம்பேடு பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயிகளான நாங்கள் பெரிதும் பயன்பெறுவோம். ஆனால் தற்போது அந்த ஏரிக்கால்வாய் புதர்கள் மண்டி கால்வாயே தூர்ந்து விட்டது. தற்போது இந்த கால்வாயில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி, கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த கால்வாயை கடந்த வருடம் பொதுப்பனித்துறை அதிகாரிகள், ஊழியர்களை வைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்தனர். ஆனால் மீண்டும் கால்வாய் புதர்மண்டி காணப்படுவதால், சிலர் குப்பைகள் மற்றும் மாட்டு இறைச்சிகளை கொட்டுகிறார்கள். எனவே இந்த ஏரி நீர் கால்வாயை தூர்வாரி சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என கூறினர்.

The post பெரியபாளையம் – சின்னம்பேடு இடையே புதர்மண்டி காணப்படும் ஏரி நீர் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Chinnampedu ,Budharmandi ,durwari ,Uthukottai ,Chinnambedu ,Durwari… ,Chinnampetu ,
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...