×

அஷ்ட லட்சுமிகளின் உண்மைப் பொருள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தென்னிந்திய மரபில் அனைத்துப் பெரிய தெய்வங்களும் எண்பேர் (எட்டு பேர்கள்) உருவம் கொண்டு, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதாகப் பூஜாபத்தி நூல்கள் கூறுகின்றன. இந்த எட்டு உருவங்களையும் அஷ்ட மூர்த்தங்கள் என்றழைக்கின்றன. சிவபெருமான் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டு வடிவம் கொண்டு அருள்பாலிப்பதாக சித்தநாத் நூல்கள் கூறுகின்றன. மகாவிஷ்ணு எட்டுவடிவம் கொண்டு அருள்பாலிப்பதை வைணவ பூஜாபத்தி நூல்கள் குறிக்கின்றன. முருகன், ஜயந்தன், அக்னிசிகன், கிருத்திகாபுத்ரன், பூதபதி, சேனானி, குகன் ஹேமசூலன் விசாலாட்சன் என்ற எண் வடிவங்களையும் விநாயகர், விசாலாட்சர், விசுவரூபர், அட்சயர், மதவிப்பிரமர், உன்மத்தர், லளிதர், பீமர், தீக்ஷணதம்ஷ்டரர் என்ற எட்டு வடிவங்களாக அருள்பாலிப்பதாகப் பூஜாபத்தி நூல்கள் குறிக்கின்றன.

இதுபோன்றதே, மகாலட்சுமியும் எட்டு வடிவங்களைத் தாங்கி அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றாள். இந்த வடிவங்கள் முறையே தனலட்சுமி, தான்யலட்சுமி, தைர்யலட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அஷ்டலட்சுமிகளின் வடிவங்களை ஒரு சேர அமைத்து வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

திருமகள் குபேரனோடு தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்கு தலைமைத் தெய்வமாக விளங்குகிறாள் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. இந்த எட்டு கருவூலங்களையும் எட்டு திருவுருவங்களுடன் அவள் காக்கிறாள். இந்த எட்டு உருவங்களே அஷ்டலட்சுமிகள் என்று போற்றப்படுகின்றன.எவர், செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் ஆகிய எட்டையும் பெற்றிருக்கின்றாரோ, அவரே மிகுந்த மகிழ்ச்சியுடன் குறைவில்லாமல் வாழ்பவராவார். இந்த எட்டே அஷ்டஐஸ்வர்யம் என்று போற்றப்படுகிறது. இவற்றை அன்பர்களுக்கு அருள்வதற்காகத் திருமகள் எண்வடிவம் கொண்டு அருள்புரிகிறாள். இந்த எட்டு திருவுருவங்களையும் சேர்த்து அஷ்டலட்சுமிகள் என்று போற்றுகின்றோம்.

பூரணகும்பங்களில் இந்த எட்டு வடிவங்களையும் அமைத்துள்ளனர். இக்குடங்கள் அஷ்டலட்சுமி கடம் என்றழைக்கப்படுகின்ற. சிவாலயங்களிலுள்ள அம்பிகை சந்நதியின் மண்டபத் தூண்களில் அஷ்ட லட்சுமிகளின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

திருவண்ணாமலை உண்ணாமுலை

நாயகி சந்நதி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் செட்டிநாட்டிலுள்ள அனேக ஆலயங்களில் உள்ள தூண்களில் அஷ்டலட்சுமி வடிவங்கள் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் வீதிகளில் பவனி வரும் போது அஷ்டலட்சுமிகள் வெண்கவரி வீசிவருகின்றார். என்ற சிவமகாபுராணம் கூறுகிறது. சிவாலயத்தேர்களின் நான்கு வாயிலிலும், வாயிலுக்கு இருவர் வீதம் அஷ்டலட்சுமிகள் கவரி வீசும் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளனர்.

மகாலட்சுமி

பொருளியல் நூலான அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் பாக்யலட்சுமி, தான்யலட்சுமி, காருண்யலட்சுமி, ஸத்யலட்சுமி, கீர்த்திலட்சுமி, சௌம்யலட்சுமி, சாம்ராஜ்யலட்சுமி எனும் எட்டு லட்சுமிகளின் பெயர்களைக் குறித்து, இவர்கள் எண்மரும் அன்பர்களிடம் நீங்காது நிலை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.திருமகள், அஷ்டலட்சுமி வடிவில் திருவாரூர்,  வாஞ்சியம், வைகல், திருக்கோழம்பம், திருநின்றியூர், மாயூரம், திருமருகல், திருப்புகலூர், ஆகிய எட்டு தலங்களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள். இவை அஷ்டலட்சுமி தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எட்டு தலங்களிலும் சிவனையும், பரிவாரத்தில் விளங்கும் திருமகளையும் வழிபடுபவர்களுக்கு அஷ்டலட்சுமிகளின் பூரணமான அருள் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

தனலட்சுமி

உலகில் தேவையான பொருட்களை வாங்கவும், விற்கவும் உபயோகப்படுவது பணமாகும். ஆதியில் அது பொற்காசுகளாகவும், பொற்கட்டிகளாகவும் புழங்கியது. பொற்காசுகளுக்கு தனம் என்பது பெயராயிற்று. நாளடைவில் பொற்கட்டிகளுக்குப் பதில், அதை ஆபரணங்களாகவும், காசுகளாகவும், செய்து வைத்தனர். இவற்றை மகாலட்சுமியாகப் போற்றி வழிபட்டனர். அந்த நிலையில் அவள் தனலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். அவள், இக்கோலத்தில் தாமரை மீது அமர்ந்த மேற்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியுள்ளாள். கீழ்வலது கரத்தால் அபய முத்திரையைக் காட்டி, இடது கரத்தால் மடிமீது வைத்துள்ள பணப்பெட்டியை அணைத்தவாறு காட்சியளிக்கிறாள். தனலட்சுமியின் வடிவத்தைப் பொற்காசுகளில் அச்சிடும் வழக்கம் நெடுங்காலமாக உள்ளது.

பணம், காசு நிறைந்தவர்களை தனவந்தர்கள் என்று அழைக்கின்றனர். (இதற்கு தனத்தை வந்திப்பவர்கள் அதாவது பூசிப்பவர்கள் என்பது பொருள்) தனலட்சுமியைச் சுவர்ணலட்சுமி எனவும் அழைக்கின்றனர்.ஆதியில் வளமைக்குத் தெய்வமாக இருந்த லட்சுமி, பின்னாளில் வியாபாரத்திற்கும் வாணிபத்திற்கும் உரிய தெய்வமானாள். இரண்டிலும் நாணயப்புழக்கம் இருப்பதால் வணிகர்கள், தனலட்சுமியைப் பெரிதும் போற்றினர்.

இவர்கள் இவளை வாணிஜா, வாணிஜ்யஸ்ரீ என்றழைத்தனர். ஆதியில் கிடைத்த தனலட்சுமியின் உருவங்களில் அவளுடன் பணப்பெட்டகம், காசுகள் நிறைந்த கிண்ணம் ஆகியன இடம் பெற்றிருந்தன.

தான்யலட்சுமி

வாழ்க்கை நன்கு நடைபெற செல்வம் வேண்டிருப்பதைப் போலவே, உயிர்கள் வாழ்வதற்கு நீரும் உணவும் அவசியமாகிறது. உணவு சமைப்பதற்கு ஆதாரமாக இருப்பவை தானியங்களாகும். எனவே தானியங்களையும் மகாலட்சுமியாகவே போற்றுகிறோம். இந்த நிலையில் அவள் தான்யலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். வீடுகளில் தங்கத்தைப் போலவே தானியமும் பெருகி இருக்க வேண்டும்.

அறுவடைக்காலங்களில் தானியலட்சுமியை இல்லத்திற்கு வரவேற்கும் வகையில் தானியக் கதிர்களை வீட்டுவாசலில் கட்டிவைக்கின்றனர். கலையழகுடன் கூம்புபோலவும், கூடுபோலவும் கதிர்களைப் பின்னி தொங்கவிடுகின்றனர். தானியங்கள் சேகரித்து வைத்துள்ள இடத்தை லட்சுமிவாசல் என்றழைக்கின்றனர். இந்த திருவுருவத்தில் அவள் மேற்கரங்களில் தாமரை மலர்களையும், முன்கரங்களில் அபயவரத முத்திரைகளையும், நெற்கதிர் கரும்பு ஆகியவற்றையும் தாங்கிக்காட்சியளிக்கின்றாள்.

இவள் ஆறுபருவங்களிலும் தானியங்கள் விளைவித்து கொடுப்பதை உணர்த்தும் வகையில் ஆறுகரங்களுடன் திகழ்கிறாள் என்பர். தானியங்கள் வளர்வதற்கு ஈரமும் உரமும் அவசியம். அந்த இரண்டுமாக அவள் இருக்கிறாள். இதையொட்டி ஸ்ரீசூக்தத்தில், ஆர்த்ரா (ஈரத்தன்மை உடையவள்) கர்ஷிணி (ஈரமாக உள்ள பசுஞ்சாணியில் உறைபவள்) என்று அழைக்கப்படுகிறாள்.

பயிர்களுக்கு ஊட்டத்தை தந்து வளத்தைப் பெருக்குவதால் புஷ்டி, வர்த்திகா என்றும் குறிக்கப்படுகிறாள். ஆதியில் அவள் வேளாண்மை செய்யும் வேளாளர்களின் கடவுளாக இருந்தாள். வேளாளர்களைக் காப்பவள் என்று ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

இவள், பயிர்த் தொழிலின் அதிபதியாவாள். இவள் தாவரங்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறாள். ஸ்ரீசூக்தம் எனும் நூல், லட்சுமியை நெல்லுக்கும் தானியங்களுக்கும் அதிபதியாக இருக்கிறாள் என்பதால், தாண்டூளி, தான்யராஜினி என்று குறிக்கிறது. நெற்கதிர் கட்டுகளுக்கு தாண்டூளி என்பது பெயர்.

தைர்யலட்சுமி

மனிதன் உண்பதற்காகவும் பொருளைத் தேடவும், தானியங்களை விளைவிக்கிறான். விளைப்பதும், அதைக் காப்பதும் எளிதல்ல. விளையும் பயிரை நோய், விலங்குகள், பறவைகள் முதலியவற்றிடமிருந்து பாதுகாக்க வேண்டும். விளைந்தபின், அவற்றைப் பகைவர்கள் கொள்ளையிட்டுக் கொண்டு போய்விடாமல், காக்க வேண்டும். ஆகவே, பயிர்களை பாதுகாக்க வீரமும், மனஉறுதியும் படைத்திருக்க வேண்டும். மன உறுதி அற்றவரால் செல்வத்தைத் தேடவும், காக்கவும் அனுபவிக்கவும் முடியாது.

மன உறுதியே தைர்யம் என்று அழைக்கப்படுகிறது. உறுதியுள்ளவர் மனதில் மகாலட்சுமி, `தைர்யலட்சுமி’ என்ற பெயரில் வீற்றிருக்கின்றாள். மன உறுதி படைத்தவன். தனக்கென ஏவலர். காவலர், உடனாளர் முதலியவர்களுடன் சுகமாக வாழ்கிறான். அவனுள்ளத்தில் வீற்றிருக்கும் தைரியலட்சுமியை, சாம்ராஜ்ய லட்சுமி என்றும் அழைப்பர். அவள் சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோலேந்தியவாறு காட்சியளிக்கின்றாள். மேற்கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியுள்ளாள்.

தைர்யமுள்ளவளே, மிகப்பெரிய சாம்ராஜ்யங்களைத் தோற்றுவிக்கின்றாள். எல்லா லட்சுமிகளிலும் தைர்யலட்சுமியே உயர்ந்தவள். ஒருவருக்கு எந்த லட்சுமியின் அருள் இருந்தாலும், தைர்யலட்சுமியின் அருள் இல்லாவிட்டால் அவருக்கு மற்றவர்களின் அருளால் பயனில்லை. எனவே, தைர்யலட்சுமியை ராஜ்யஸ்ரீ என அழைக்கின்றனர். இவளை நீண்ட பட்டாடை கொண்டவளாகச் சித்தரிக்கின்றனர்.

வீரலட்சுமி

மகாலட்சுமி வீரவனிதையாக கோலாசுரனிடம் போரிட்டு அவனை வீழ்த்தும் காட்சியை இங்கே காண்கிறோம். வீரலட்சுமி, சிம்மத்தின் மீது வில், வாள், அம்பு, கேடயம் ஏந்திக் காட்சியளிக்கிறாள். இவளை வெற்றித் திருமகள் என்றழைக்கின்றனர். தைர்யம் என்பது மனதின் உறுதிப்பாடு. அந்த உறுதியினால் கலங்காத மனமும் அளவிலாத வலிமையும் உண்டாகின்றன. அந்த ஆற்றலே வீரமாக வெளிப்படுகின்றன. வீரமுள்ளவர்களின் மனதில் மகாலட்சுமி வீரலட்சுமியாக விளங்குகின்றாள். வீரமுள்ளவளே உயிர்களுக்குக் காவலாக விளங்குகிறாள். மாவீரர்களின் தோளிலும், மார்பிலும் அவர்களுடைய வாளிலும் மகாலட்சுமி வீரத்திருமகளாக வீற்றிருக்கிறாள் என்று புராணங்களும், தோத்திர நூல்களும் புகழ்கின்றன.

சோழ மன்னர்கள் தங்களது புகழை பாடும் பாடலாக ஆலயச் சுவர்களில் கல்வெட்டுக்களாகப் பொறித்து வைத்துள்ளனர். இவை மெய்க்கீர்த்திகள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் இவள் வீரமாது, ஜெயமகள், வெற்றிமகள் எனப்பலவாறு அழைக்கப்படுகிறாள்.வீரத்தால் விளைவது வெற்றியாகும். வெற்றியை நல்கும் வீரலட்சுமியை வெற்றித்திருமகள், ஜெயலட்சுமி என்றழைக்கிறோம். துர்க்கம் என்பதற்கு கோட்டை என்பது பொருளாகும். உயிர்களுக்கு கோட்டை போல் காவலாக இருப்பதால் துர்க்காலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். வட இந்திய மன்னர்களாகிய சந்திரகுப்தர்- குமாரதேவி ஆகியோர் வெளியிட்ட நாணயங்களில், வீரலட்சுமி சிங்க வாகனத்தில் விளங்குவதைக் காண்கிறோம்.

சந்தான லட்சுமி

ஒருவன் வீரம் விளைத்து அதிகாரம் செலுத்தித் தன்னைச் சார்ந்தவர்களுடன், தான் சுகமாக வாழ்ந்திருந்தால் மட்டும் போதாது. அவனுடைய வம்சத்தையும் மாடு, மனை, கன்று, காளைகளையும் விருத்தி செய்ய வேண்டும். உலகத்தினை விருத்தி செய்யும் மகாலட்சுமி, சந்தானலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். சந்தானம் என்பதற்குத் தொடர்புபடுத்துதல் என்பது பொருளாகும். உயிர்களைச் செல்வச் செழிப்புடன் தொடர்புகொள்ள வைத்து, இன்பம் அடையச் செய்வதால் மகாலட்சுமியை சந்தான லட்சுமி என்றழைக்கின்றனர். சந்தானலட்சுமி காமன், சாமன் என்னும் இரண்டு குழந்தைகளுடன் காட்சியளிக்கிறாள்.

காமன், உயிர்களிடத்தில் ஆசையையும், வேட்கையையும் தோற்றுவிக்கிறான். சாமன், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத் துணை செய்கிறான். திருப்பாவையில் ஆண்டாள், காமனையும் சாமனையும் தொழுது தன்னை கண்ணனுடன் கூட்டி வைக்க வேண்டுவது இங்கு எண்ணத்தக்கதாகும்.இரண்டு குழந்தைகளை மடியில் வைத்திருக்கும் கோலத்தில், சந்தானலட்சுமியை அமைத்து வழிபடுகின்றனர். இவளை வணங்குவதால் வம்சவிருத்தி உண்டாகும் என்பது பெரியோர் வாக்கு.சிலர் இவளுடன் நிற்கும் ஹரீதி எனும் துணைப் பெண் தெய்வம் குழந்தையை ஏந்தியிருப்பதாகக் குறித்துள்ளனர்.

வடமதுரையில் கிடைத்துள்ள குஷாணர் காலத்து கற்சிலையில், தாமரை மலர் ஏந்தியிருக்கும் லட்சுமியுடன் பழம் ஏந்திய மணிபத்ரர். குழந்தையை வைத்துக் கொண்டுள்ள ஹரீதி எனும் சேடிப்பெண், குபேரன் ஆகியோர் ஒரே பீடத்தில் வடிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீசூக்தத்தில், சிக்லீதர் என்பவர் திருமகளின் மகளாகக் கூறப்பட்டுள்ளார். அவருடன் தன் வீட்டில் லட்சுமியுடன் வசிக்க வேண்டுமென்றும், தண்ணீருடன் உணவுப் பொருள்களையும் நிறைவாக தரவேண்டும் என்று வேண்டப்படுகிறது. தமிழில் உள்ள அஷ்டலட்சுமி துதியில், சிக்லீதருக்கும் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.

விஜயலட்சுமி

விஜயம் என்பதற்கு நாலாதிசைகளிலும் பயணம் செய்வது என்பது பொருள். வீரப் போரிட்டு வெற்றியை பெறவும், பகைவர்களை அடக்கிவைக்கவும், வீரர்கள், திக்விஜயம் புரிகிறார்கள். ஒருவன் திசையெட்டும் சென்று வீரம் விளைப்பதால் அவனுடைய புகழ் பரவுகிறது. புகழ் ஒன்றே மனிதனின் மரணத்திக்குப் பின்னும் நிலை பெற்றிருக்கிறது. உண்மையில், அதுவே நிலையானது. வீரனின் வெற்றி விஜயத்திற்கு முன்பாக, லட்சுமி தனது சேனையுடன் செல்கிறாள். அந்த வீரனின் புகழை திசையெங்கும் நிலை பெறச் செய்கிறாள். போர் வீரர்கள் மட்டுமின்றி, ஆத்மாவை உணர்ந்த ஞானவீரர்களும் பல இடங்களுக்கும் சென்று, தனது கொள்கைகளை நிலைநாட்டுகின்றனர். அந்த திக்விஜயத்தால் அவர்களுடைய புகழ், உலகில் பரவி நிலைபெற்றிருக்கிறது.

எண்திசை மதிக்கவரும் புகழை உயிர்களுக்கு அளிக்கும் மகாலட்சுமி, கீர்த்திலட்சுமி, விஜயலட்சுமி என்றழைக்கப்படுகின்றாள். தமிழில் புகழ்மங்கை, இசைமங்கை, எனப்பலவாறு குறிக்கின்றனர். இவள் குதிரைமீது அமர்ந்து பயணம் செய்கிறாள். இவளுக்கு முன்னும் பின்னுமாக அனேக பெண்கள் வெற்றிச் சின்னங்களை ஏந்தியவாறு விருதுகளைக் கூறிக்கொண்டும் இசைக் கருவிகளை முழங்கிக் கொண்டும் செல்கின்றனர். சோழர்கால கல்வெட்டுக் களில் இவள் விஜயமங்கை, புகழ்மாது. திசையனைத்தும் இசை பரப்பும் திருமாது என்று பலவாறு குறிக்கப்பட்டுள்ளது.

புகழ் மங்கையான லட்சுமி, குதிரையில் பவனி வருவதால் அஸ்வாரூடா, பரிமேல், அழகிய பாவை என்று இலக்கியங்களில் போற்றப்படுகிறாள். பொன்மயமான குதிரை இவளுடனேயே பிறந்ததாகும். விஜயலட்சுமி நேரில் பவனி வருவதாகவும், கூறுகின்றனர். பெரிய ரதங்கள், மகாலட்சுமியின் திருவுருவங்களாகவே போற்றப்படுகின்றன.

வித்யாலட்சுமி

செல்வத்தைச் சேர்ப்பது, அதைக் கட்டிக் காப்பது, அதை நல்வழியில் செலவிடுவது யாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது அறிவு எனப்படும் ஞானமாகும். இந்த அடிப்படை அறிவாக விளங்குபவள் ஞானலட்சுமி, அதாவது, வித்யாலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். இவள் ஏடும் எழுத்தாணியும் கொண்டவள். உயிர்களுக்கு அறிவை வழங்கி அவை இன்பத்தில் திளைத்திருக்க அருள்புரிபவள். இவளை ஞானத்திருமகள் என்றும் போற்றுகின்றனர். வைணவமரபில், திருமால் முதலில் எல்லாக் கலைகளையும் திருமகளுக்கே உபதேசித்தார். அவள் வழியாகவே ஞான பரம்பரை தொடர்ந்து வருகிறது. இதன்படி அவளே முதல் ஞான குருவாகத் திகழ்வதைக் காண்கிறோம்.

இவள் ஞானஸ்ரீ, வித்யாஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள். வித்தைகளின் முடிவு பிரம்மத்தில் லயித்திருப்பதே என்பதால் வித்யாலட்சுமி, பிரம்மஸ்ரீ எனப்பட்டாள். யோகிகளிடையே அவள் பிரம்மஸ்ரீயாக விளங்குகிறாள். கல்வியை விரும்புபவர்கள் தசமியன்று பிரம்ம யை வெண்தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென்று `பரமசம்ஹிதா’ எனும் நூல் கூறுகிறது.

உத்திரமேரூர் சுந்தரவரதராஜர் ஆலயத்திலுள்ள சிற்பத்தில், லட்சுமி, பிரம்மஸ்ரீயாக அமைக்கப்பட்டுள்ளாள். இதில் மேலே இரண்டு யானைகள் நீராட்ட அட்சமாலை கமண்டலம் புத்தகம் ஆகியவற்றை ஏந்தி, பிரம்மஸ்ரீயாக, வித்யாலட்சுமி தாமரை மலரில் அமர்ந்துள்ளாள்.

கஜலட்சுமி

திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி ஆகும். எட்டுதிசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் வீற்றிருக்கின்றாள். விஷ்ணு புராணம் இவள் கடலிலிருந்து வெளிப்பட்டதும் திசை யானைகள் எண்திசையிலிருந்தும் பொற்குடங்களில் தூயநீரை ஏந்தி வந்து நீராட்டின் என்று கூறுகிறது. யானைகள் நீராட்ட நடுவில் வீற்றிருப்பதால், இவளை கஜலட்சுமி என்று அழைக்கின்றனர். நடைமுறையில் இரண்டு யானைகள் நீராட்டுவதுபோல் அமைத்துள்ளனர். இவள் விரும்பியதை விரும்பியவாறு அளிப்பதால், `காம்யக்ஷி’ (காம்யம் விரும்புதல்) என்று அழைக்கப்படுகிறாள். இவளை விளக்கில் நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகின்றது.

விளக்கில் திருவாசிக்கு (பிரபைக்கு) நடுவே கஜலட்சுமி வடிவத்தை அமைக்கின்றனர். இந்த விளக்கிற்குக் காமாட்சி விளக்கு என்பது பெயர். விரும்பியதை அளிக்கும் தேவியாக இருப்பதால் வீட்டின் நிலைப் படிகளில் இவளுடைய திருவுருவத்தைஅமைக்கின்றனர். இப்படி அமைப்பதின் மூலம் வீட்டின் உரிமையாளர்கள் விரும்பியதை விரும்பியவாறு நிறைவாக அளித்து, வீட்டில் அமைதியை நிலவச் செய்கிறாள். இவளைச் சாந்தலட்சுமி, தயாலட்சுமி, சுதந்திரலட்சுமி என்று பலவாறு போற்றுகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் கஜலட்சுமியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கஜலட்சுமியை மிகப்பழங்காலத்திலிருந்தே போற்றி வழிபட்டு வந்துள்ளனர். கி.மு., முதல் நூற்றாண்டைச் சேர்ந்த (மராட்டிய மாநில பிதல்கோரா குகைக்கோயிலில்) இவளுடைய சிற்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசூக்தம், அவள் யானைகளின் பிளிறலால் மகிழ்வதாகக் கூறுகிறது. பழங்காசுகளில் அவள் கஜலட்சுமியாக பொறிக்கப்பட்டுள்ளாள்.

நடைமுறையில், மேற்கரங்களில் தாமரை மலர்களையும், கீழ்க்கரங்களில் அபயவரத முத்திரைகளையும் தாங்கி இருபுறமும் யானைகள் நீராட்டத் தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியை, கஜலட்சுமி என்று நாம் அழைக்கின்றோம். வடநாட்டில், கண்டெடுக்கப்பட்ட சில முத்திரைகளில் இவள் மேற்கரங்களில் தாமரை மலர்களுக்குப் பதிலாக சங்கு, பறவை, ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.

யானைகள், சங்கின் மீதும், பறவையின் மீதும் நீரைப் பொழிகின்றன. (பறவை என்பது மயில் அல்லது கிளியை குறிக்கின்றது) தென்னிந்தியாவில் உள்ள பல ஆலயங்களில், லட்சுமியின் மேற்கரங்களில் உள்ள தாமரை மலர்களில் கிளிகள் வீற்றிருப்பதைக் காண்கிறோம்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post அஷ்ட லட்சுமிகளின் உண்மைப் பொருள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மாணவர்கள் கல்வியில் மேம்பட என்ன செய்யலாம்?