×

மதுரை ரயில் தீ விபத்து: தமிழக அரசின் நிவாரண தொகையை பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் மூர்த்தி

மதுரை: உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக யாத்திரை பயணமாக தென் இந்தியா நோக்கி சிறப்பு ரயில் மூலம் 64 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளனர். மதுரை , ராமேஸ்வரம் பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இதுவரை 5 ஆண்கள் 4 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன்.’ என தெரிவித்து இருந்தார். முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோர்களுக்கு நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்களிடம் அளித்தார். முன்னதாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரண தொகை அளிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மதுரை ரயில் தீ விபத்து: தமிழக அரசின் நிவாரண தொகையை பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Madurai train fire accident ,Tamil Nadu government ,Minister ,Murthi ,Madurai ,Uttar Pradesh ,Lucknow ,South India ,Madurai Rail Fire Accident ,Tamil Nadu Govt ,Minister Murthi ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேரடி நெல்...