×

ரேஷன் கடைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

*குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை

ராணிப்பேட்டை : ரேஷன் கடைகளிலில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி, தோட்டக்கலை துணை இயக்குநர் லதா மகேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த விவசாயிகள் தரப்பில் வைத்த கோரிக்கைகள்:நெமிலி பகுதியில் ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரை கொண்டு வர வேண்டி இருக்கிறது. சுமார் 40கிமீ தூரம் இருப்பதால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே நெமிலியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அமைக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிப்காட் பகுதியில் இருந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிப்புபடாத கழிவு நீர் பொன்னையாற்றில் கலக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு குருவை மற்றும் சம்பா தொகுப்பு டெல்டா மாவட்டங்கள் மட்டுமே வழங்கி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஏராளமான விவசாயிகள் நெற்பயிர் செய்து வருகின்றனர்.

இம்மாவட்ட விவசாயிகள் நலன் கருதி, அவர்களுக்கும் அரசு குருவை மற்றும் சம்பா தொகுப்புகளை வழங்க வேண்டும். மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மிகவும் பாதிப்படுகின்றனர். வனத்துறையினர் பாதிக்கப்படும் பகுதியில் ஆய்வு செய்து, விளைநிலங்களை காட்டு பன்றிகளால் சேதம் அடையாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கென்று தனி வாரியம் அமைக்க வேண்டும். இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். விவசாய கூட்டத்திற்கு தொலை தூரத்திலிருந்து வருகிறார்கள். இதில் வயதானவர்களும் வருகின்றனர். எங்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகம் முன்பு அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதாலும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் கலெக்டர் அலுவலகம் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும்.
ஆற்காடு வட்டம் சாத்தூர், தாஜ்புரா மற்றும் பனப்பாக்கம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. மது பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து விவசாய நிலத்திலும், சாலை ஓரத்திலும் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக விவசாயிகள் கால்களில் கண்ணாடி துண்டுகள் குத்தி பாதிப்பு ஏற்படுகிறது. பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாரம்பரிய நெல் நெல் விதைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இளம் விவசாயிகள் பாரம்பரிய விதைகளை கொண்டு பயிர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு இந்த வகை விதைகளை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ள புகார்கள் மற்றும் கோரிக்கையை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதில், ராணிப்பேட்டை மாவட்ட உதவி வன அலுவலர் மணிவண்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ரேஷன் கடைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!