×

கடவூர், தோகைமலை பகுதிகளில் பலத்த மழை எதிரொலி மானாவாரி எள் சாகுபடி பணிகள் தொடக்கம்

தோகைமலை : கடவூர், தோகைமலை பகுதிகளில் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் மானாவாரி எள் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதில் பலத்த மழை பெய்த கொசூர், போத்துராவுத்தன்பட்டி, கல்லடை, வடசேரி, பஞ்சப்பட்டி, கடவூர் பகுதிகளில் மானாவாரி பயிராக எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். கோடை காலம் உள்பட அனைத்து பருவங்களிலும் விவசாயிகளுக்கு எள் சாகுபடி நல்ல லாபம் தருகிறது. கோடை மழை மற்றும் கிணற்று பாசன முறைகளில் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிகமான லாபத்தை ஈட்டக்கூடிய எள் சாகுபடியில் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை எடுத்து கூறியுள்ளனர்.

எள் சாகுபடியில் ரகங்கள்:

எள் சாகுபடியில் கோடை எள் சாகுபடியை பொருத்தவரை கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, டி.எம்.வி 6, எஸ்.வி.பி.ஆர்1, வி.ஆர்.ஐ (எஸ்.வி) 1, டி.எம்.வி 7, ஆகிய ரகங்களை எள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கிணற்று பாசனத்திற்கும் மேற்படி ரகங்களையே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.எள் சாகுபடிக்கு ஏற்ற பருவம்: என் சாகுபடியை பொறுத்தவரை மானாவாரியாக பயிரிட ஆடி மாதம், கார்த்திகை மாதங்கள் மிகச் சிறந்தவையாக இருக்கும். இதேபோல் கிணற்று பாசனத்தில் எள் சாகுபடியை தொடங்க மாசி மாதங்கள் ஏற்றதாக இருக்கும்.

எள் சாகுபடிக்கு ஏற்ற நிலம் தயாரிப்பு: எள் சாகுபடி செய்வதற்கு மணல் பாங்கான வண்டல் மண், செம்மண், களிமண் போன்ற வயல்கள் ஏற்றதாக இருக்கும். இதில் மண்ணின் சராசரியான கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருந்தால் நல்ல மகசு+லுக்கு சிறந்ததாக இருக்கும். எள் சாகுபடியை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். சிறிய விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து மென்மை படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவுகளை வயலில் இட வேண்டும்.

இதேபோல் கிணற்று பாசனம் முறையில் எள் சாகுபடி செய்யும் போது கிடைக்கின்ற தண்ணீர்மற்றும் நிலத்தின் அளவுகளை பொறுத்து 10 சதுர மீட்டர்அல்லது 20 சதுர மீட்டர்அளவிற்கு படுக்கை தயாரிக்க வேண்டும். இதில் நீர்தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும்.

விதை அளவுகள் மற்றும் விதை நேர்த்தி:

எள் சாகுபடியில் மானாவாரி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் தேவைப்படுகிறது. இதேபோல் கிணற்று பாசன முறைகளுக்கு ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை எள் தேவைப்படுகிறது. எள் சாகுபடியை பொறுத்தவரை அசோஸ்பைரில்லம் 100 கிராம், சூடோமோனஸ் 100 கிராம் ஆகியவற்றுடன் எள் விதைகளை சேர்க்க வேண்டும். வடித்த கஞ்சியை ஆற வைத்து அதில் விதைக்கலவையை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து வயலில் விதைத்தால் வேர் அழுகல் போன்ற நோய்களை தாக்காமல் நன்றாக முளைக்கவும் செய்கிறது.
விதைத்தல்: எள் சாகுபடியில் 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் எள் விதையை கலந்து விதைப்பது மிகச் சிறந்தது. இதுபோன்று விதைப்பதால் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து நன்றாக பயிர் முளைக்கிறது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியும் கொடுக்க வேண்டும்.

எள் சாகுபடியில் நீர்மேலாண்மை:

எள் சாகுபடியில் அதிகமான தண்ணீர் தேவைப்படுவது இல்லை. எள் செடிகளை வளரவிட்டு தண்ணீர்கட்டினால் இலை குறைந்து காய்கள் அதிகமாக காய்க்கும். ஒவ்வொரு முறையும் தண்ணீர் பாய்ச்சும் போதும் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை கலந்துவிட வேண்டும். எள்ளை விதை நேர்த்தி செய்து ஜீவாமிர்தக் கரைசலையும் கொடுத்தால் எள்ளில் அதிகமாக தாக்கும் மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தாலம். அதன் பிறகு 45 முதல் 55 நாட்களில் பூஎடுக்க தொடங்கிவிடும். அந்த நேரத்தில் 13 லிட்டர்தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யாவை கலந்து தெளித்தால் பூ உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.

எள் சாகுபடியில் உரம் பயன்பாடு:

எள் சாகுபடியில் கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு முழு அளவு தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச் சத்து (யூரியா 30 கிலோ) மணிச்சத்து (சூப்பர்பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து (பொட்டாசியம் 8 கிலோ) என்ற அளவில் உரங்கள் இட வேண்டும். இதேபோல் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை 20 கிலோ மணலுடன் கலந்து அடி உரமாக இடலாம். இவ்வாறு இடும்போது தழைச்சத்து கால்பங்கினை குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவும் போது மாங்கனீசு பற்றாக்குறையினை சரி செய்ய முடியும்.

களை நிர்வாகம்:

எள் சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து முதல் களை எடுத்த 15வது நாளுக்கு பிறகு அடுத்த களை எடுக்க வேண்டும். மேற்படி முறைகளில் எள் சாகுபடியை விவசாயிகள் கடைப்பிடித்து வந்தால் எள் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்.

The post கடவூர், தோகைமலை பகுதிகளில் பலத்த மழை எதிரொலி மானாவாரி எள் சாகுபடி பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Doghaimalai ,Manawari ,Thoghaimalaye ,Ranawari ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...