×

ஆன்லைன் அபராத முறையை கைவிடக் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,ஆக.26: ஆன்லைன் அபராத முறையை கைவிடக்கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா, பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணை செயளாளர் மாரிக்கண்ணு, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரெத்தினவேல், முத்தையா உள்ளிட்டோர் பேசினர்.

ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும். புகைச்சான்று மற்றும் ஸ்டிக்கருக்கு அநியாய வசூல் செய்வதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்தக்கூடாது. மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். பண்டிகைகால முன்பணம் வழங்க வேண்டும். நலவாரியத்தின் மூலம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

The post ஆன்லைன் அபராத முறையை கைவிடக் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Dinakaran ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!