ராஜபாளையம், ஆக.25: ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் கலங்கிய நிலையில் வரும் குடிநீரை சரி செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி தலைவர் மற்றும் பொறியாளரிடம் மனு கொடுத்தனர். ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி தண்ணீர் குடிப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ பயன்படுத்த இயலாத வகையில் கலங்கலாக வருகிறது என பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக மலையடிப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் கலங்கலாக மிக மோசமான நிலையில் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக நகரின் இதர பகுதிகளிலும் தண்ணீர் கலங்கலாக வர ஆரம்பித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் நகராட்சி பொறியாளர் முகம்மது ஷெரீப் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்க கோரி, கலங்கிய நிலையில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களோடு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் நகர்மன்ற தலைவரும் நகராட்சி பொறியாளரும் உறுதியளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் மாரியப்பன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகானந்தம், பிரசாந்த் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, மலையடிப்பட்டி பகுதி கிளைச் செயலாளர் செல்வம், மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் சரவணன் மற்றும் ஜானகி ஆகியோர் பங்கேற்றனர்.
The post ராஜபாளையத்தில் கலங்கல் குடிநீர் மக்களுக்கு சப்ளை: சரி செய்யக்கோரி மார்க்சிஸ்ட் மனு appeared first on Dinakaran.
