×

நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

 

மயிலாடுதுறை,ஆக.25: மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நேற்று நடந்த விழாவிற்கு செல்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்து நேற்று மாலை புறப்பட்டார். மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கலெக்டர் மகாபாரதி, மாவட்ட செயலாளர் எம்எல்ஏ நிவேதா முருகன், ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் 75ம் ஆண்டு பவளவிழா (1946-2021) நிறைவை முன்னிட்டு முப்பெரும் விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

அங்கு தருமை ஆதீன 27வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கி பேசினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவளவிழா மலர், திருக்குறள் உரைவள நூல் ஆகியவற்றை வெளியிட்டும், தருமை இணையதள தொலைக்காட்சி மற்றும் வானொலியின் ஒலி-ஒளி பதிவரங்கத்தை திறந்து வைத்தும் பேரூரையாற்றினார். முன்னதாக குருமகாசன்னிதானம், முதலமைச்சருக்கு நினைவு பரிசும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி ஆகியோருக்கு பரிசும் வழங்கினார்.

மேலும் தருமபுரம் ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி செயலர் முனைவர் செல்வநாயகம் வரவேற்று பேசினார். நாகப்பட்டினம்: காரைக்கால் மார்க்கமாக நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியினர் வாஞ்சூர் ரவுண்டானாவில் குவிந்தனர். மேலும் மேளதாளம் முழங்க கட்சினர் வரவேற்பு தெரிவித்தனர். இதற்காக அந்த பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Mayiladuthurai ,Chief Minister ,M.K.Stalin ,M.K.Stalin Thanjavur ,Atheena Arts College ,
× RELATED தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: முன்னாள் நேர்முக உதவியாளர் கைது