×

லேண்டரில் இருந்து இறங்கி சாதனை நடை நிலவில் ஆய்வை துவங்கியது ரோவர்: என்னென்ன கனிமங்கள் உள்ளது என 14 நாட்கள் ஆராய்ச்சி

சென்னை: நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய லேண்டரில் இருந்து அடுத்தக்கட்டமாக பிரக்யான் ரோவர், நிலவின் தரை பரப்பில் இறங்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் பல பகுதிகளில் குறிப்பாக நிலவின் மத்திய ரேகை, அதிகம் வெளிச்சம் கிடைக்கக் கூடிய இடங்களில் மட்டுமே விண்கலங்களை தரையிறக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், நிலவில் அதிகம் ஆராயப்படாத நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் பணிகளை இந்தியா மட்டுமே தொடங்கியது.

அதில் கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றி கண்டது. அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலவில் தரையிறக்கி ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் சரியாக தரையிறங்காததால் திட்டம் தோல்வியடைந்தது. இருப்பினும் தொடர் முயற்சியாக 4 ஆண்டுகளாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ இந்த ஆண்டு சந்திரயான்- 3 திட்டத்தை செயல்படுத்தியது.

நேற்று முன்தினம் மாலை் 6.03 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. லேண்டர் தரையிறங்கும் போது அதன் இன்ஜின்களில் இருந்து வெளியேறிய ஆற்றல் காரணமாக நிலவின் தரை பகுதியில் இருக்கும் மணல் உள்ளிட்ட படிமங்கள் பறந்து தூசு கிளம்பியது. இந்த தூசுகள் லேண்டரை சுற்றி இருக்கும் போது ரோவரை வெளியே கொண்டு வந்தால் ரோவரின் மேல் உள்ள சோலார் தகடுகளில் தூசு படிந்து விடும் என்பதால் தரையிறக்கப்பட்ட இடங்களில் தூசுகள் அடங்கி சரியான சூழல் ஏற்படும் வரை லேண்டர் காத்திருந்தது.

பின்னர் சூழல் சரியாக அமைந்த பின் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் லேண்டரில் உள்ள 4 பக்கங்களில் ஒரு பக்கம் மட்டும் மெதுவாக திறந்து மிகுந்த கவனத்துடன் நிதானமாக நிலவில் சாய்வு தளம் ஏற்படுத்தப்பட்டது. சாய்வு தளம் ஏற்படுத்தப்பட்ட உடன் ரோவர் உடனடியாக நிலவில் இறக்கி விடப்படவில்லை. லேண்டரில் இருந்த ரோவர் மிகவும் நிதானமாக சாய்வு தளத்தில் நிலவில் தரையில் இறக்கப்பட்டது. நிலவில் வேகமாக ரோவரை இறக்கினால் ரோவரில் உள்ள கேமரா உள்ளிட்ட பாகங்களின் செயல்பாடுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்பதால் மிகவும் கவனத்துடன் மெதுவாக ரோவர் இறக்கிவிடப்பட்டது. தற்போது நிலவில் ரோவர் தனது பயணத்தை தொடங்கி நிலவின் தென்துருவத்தில் உலாவ தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: நிலவில் பயணிப்பதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3ன் ரோவர் லேண்டரில் இருந்து கீழ் இறங்கியது. இதன் மூலம் இந்தியா நிலவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டப்படி செயல்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரோவரில் உள்ள எபிஎக்ஸ்எஸ் எனப்படும் ஆல்பா பார்ட்டிக்கல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் நிலவின் வளிமண்டலம் மற்றும் நிலவின் தரைப்பரப்பில் இருக்கும் ரசாயன கலவை மற்றும் கனிமங்கள் கலவை குறித்து ஆராய்ச்சி செய்யும்.

மேலும் லிப்ஸ் எனப்படும் லேசர் இண்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி நிலவின் பரப்பில் உள்ள மண் மற்றும் கற்களில் உள்ள அலுமினியம், மெக்னீசியம், பொட்டாசியம், சிலிகான், இரும்பு ஆகியவற்றின் ரசாயன கூறுகள் கலவை மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்யும். நிலவில் உலாவ தொடங்கியுள்ள ரோவர் ஒரு நிமிடத்திற்கு ஒரு சென்டிமீட்டர் என்ற கணக்கில் நகரும் லேசர் கதிர்களை செலுத்தியும், கேமராக்கள் மூலம் நிலவில் உள்ள மேடு பள்ளங்களை கணித்து அதற்கு ஏற்றார் போல பயணிக்கும்.

மேலும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் படங்களை எடுத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கும். இந்த ரோவரின் சக்கரங்களில் இந்திய தேசிய நான்கு சிங்க முக இலச்சினையும், இஸ்ரோவின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது. ரோவர் நிலவில் பயனிக்கும்போது அதன் அச்சுகளை படம் பிடிக்க ரோவரின் பின் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நிலவில் பயணத்தை தொடங்கியுள்ள பிரக்யான் ரோவர் தான் ஆய்வு செய்து சேமிக்கும் தகவல்கள், படங்களை லேண்டருடன் மட்டுமே ஏற்படுத்தும் தொலை தொடர்பு இணைப்பு மூலம் அனுப்பும்.

விக்ரம் லேண்டர் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான் 2 விண்கலம், பூமியில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரோவருடன் தொடர்பில் இருக்கும். லேண்டர் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் இடையே தொடர்பு இணைப்பு நேற்று கிடைத்துள்ளது. இதன் காரணமாக ரோவரின் ஆய்வுப்பணி தகவல்கள் முழுமையாக கிடைக்கும். பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக இருக்கும் நிலையில் நிலவுக்கு ஒரு நாள் என்பது 28 நாள். இதன் காரணமாக நிலவில் ஒரு பகுதியில் 14 நாட்கள் சூரிய ஓளி இருக்கும்.

இந்த கலன்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விண்கலம் தரையிறங்கி உள்ள நிலவின் தென் துருவத்தில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும் என்பதால் அடுத்த 14 நாட்கள் மட்டுமே கலன்கள் செயல்படும். பின்னர் நிலவில் இருக்கும் அதிக குளிர் காரணமாக உட்புற பாகங்கள் செயலிழக்கும். இதனால் திட்டத்தின் கால அளவு 14 நாட்கள் மட்டுமே. அதிர்ஷ்டவசமாக கடும் குளிரிலும் பாகங்கள் சேதமடையவில்லை எனில் தொடர்ந்து ரோவர் வேலை செய்யும்.

* லேண்டர் கருவிகள் செயல்பட தொடங்கியது
நிலவில் சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் இருந்த ரோவரும் நிலவில் இறங்கி தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டரில் உள்ள ரம்பா-எல்பி, இல்சா, சாஸ்ட் ஆகிய மூன்று 3 கருவிகளும் செயல்பட தொடங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இல்சா எனப்படும் இன்ஸ்ட்ரூமென்ட் பார் செஸ்மிக் ஆக்டிவிட்டி என்ற கருவி லேண்டர் தரையிறக்கப்பட்ட இடத்தில் நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகளை அளவிட்டு ஆராய்ச்சி செய்யும். அடுத்ததாக சாஸ்ட் எனப்படும் சந்திரா சர்பேஸ் தெர்மோ பிசிகல் சோதனை தென் துருவம் அருகில் உள்ள பரப்பில் வெப்ப நிலைகளை அளவிடவும், பகல் நேர வெப்பத்தை தாங்கும் தன்மை உடையதா என்பதை கண்டறியும். ரம்பா எல்பி லேண்டர் தரையிறக்க பரப்புக்கு அருகே உள்ள நிலப்பரப்பில் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் அடர்வு மற்றும் அவை நேரத்திற்கு ஏற்ப எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை ஆராயும்.

The post லேண்டரில் இருந்து இறங்கி சாதனை நடை நிலவில் ஆய்வை துவங்கியது ரோவர்: என்னென்ன கனிமங்கள் உள்ளது என 14 நாட்கள் ஆராய்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Moon ,
× RELATED கும்பம்