×

சுவையான ரெசிபிகள்

வரகு கொள்ளு பிரியாணி

தேவையானவை

வரகு அரிசி – ஒரு கப்
முளைகட்டிய கொள்ளு – அரை கப்
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
தக்காளி – 2 (நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பிரியாணி மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
தயிர் – கால் கப்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க

பட்டை – 2 சிறிய துண்டு
லவங்கம் – 2
பிரியாணி இலை, ஏலக்காய்,
மராத்தி மொக்கு – ஒன்று.

செய்முறை

வரகு அரிசியைக் கழுவி பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு புதினா, தக்காளி, முளைகட்டிய கொள்ளு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வேகவிடவும். அடுத்து பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அதில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் இதனுடன் வரகு அரிசி, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கினால் வரகு கொள்ளு பிரியாணி ரெடி.

கம்பு வெண்டைக்காய் கறி

தேவையானவை

வெண்டைக்காய் – கால் கிலோ
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க
கம்பு – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
தனியா – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கசகசா – அரை டீஸ்பூன்
எள் – அரை டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

வறுத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைத்து, உப்பு சேர்த்துக்கொள்ளவும். வெண்டைக்காயைச் சுத்தம் செய்து நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கீறிய வெண்டைக்காயின் உள்ளே ஸ்டஃப் செய்து, காயின் மேற்புறமும் பூசி வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, ஸ்டஃப் செய்த வெண்டைக்காயை அதில் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கம்பு வெண்டைக்காய் கறி தயார்.

சோளம் தேங்காய்

தேவையானவை

ரோல் ஆப்பம்
தேவையானவை
சோள மாவு – ஒரு கப்
மைதா மாவு – ஒரு கப்
சீரகம் – 3 டீஸ்பூன்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி (துருவவும்)
நாட்டுச் சர்க்கரை அல்லது வெள்ளைச் சர்க்கரை – ஓர் ஆப்பத்துக்கு ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

சோள மாவையும், மைதா மாவையும் கலந்து அதிக அளவு தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாதவாறு கரைத்துக் கொள்ளவும் (மோரை விடச் சிறிது கெட்டியாகக் கரைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மெல்லிய தோசை ஊற்ற ஏதுவாக இருக்கும்). பிறகு அதில் சீரகம், ஓமம், உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லைக் காயவிட்டு, மாவை நடுவிலிருந்து ஊற்றாமல் தோசைக்கல்லின் ஓரத்தில் இருந்து நடுப்பகுதி வரை ஊற்றவும். ஓரங்களில் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். துருவிய தேங்காயை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து தோசை முழுவதும் பரவிவிட்டு ஒரு டீஸ்பூன் சர்க்கரையையும் பரவலாகத் தூவி, தோசையைப் பாய் போல் சுருட்டிச் சாப்பிடவும்.

குறிப்பு

பொதுவாக ஆப்பத்தை ஆப்பக்கடாயில் தான் செய்ய வேண்டும். ஆனால், அப்படிச் செய்யப்படும் ஆப்பம் நடுவில் தடிமனாக இருக்கும். இந்த ஆப்பத்தைப் பொறுத்தவரையில் ஆப்பம் மெல்லியதாக இருந்தால்தான் இனிப்புச்சுவை அதில் ஊறி சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் இந்த ஆப்பத்தைச் செய்தால் மிகவும் வாசனையாக இருக்கும்.

சிறுதானிய அவல் கஞ்சி

சிறுதானிய அவலை நன்றாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் சிறுதானிய அவல் மாவுக்கு 5 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது வெந்தயம், சீரகம், 4 நசுக்கிய பூண்டுப் பல் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, கட்டி ஏற்படாமல் நன்றாகக் கலக்கவும். கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

The post சுவையான ரெசிபிகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்