×

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நவீன உபகரணங்கள் இயக்கம்; தண்ணீர் இல்லாத நிலத்தில் கல்லூரி கட்டிவிட்டு அதிமுக போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

ஆலந்தூர்: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் ₹12. 66 கோடி மதிப்பில் நவீன 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ ஸ்கேன், குடல் இரப்பை உள்நோக்கி போன்ற நவீன கருவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் இரா.சாந்திமலர், அசன் மவுலானா எம்எல்ஏ, மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் இரா.துரைராஜ், மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப கருவிகள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய குடிநீர் வசதி இல்லாததே, அக்கல்லூரி திறக்கப்படாததற்கு காரணம். அங்கு 100 அடி தோண்டினாலும் தண்ணீர் வராத இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான இடமாக தேர்வு செய்துள்ளனர். அங்கு விளைநிலத்தில் மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது. ஏனெனில், இதன் அருகிலேயே நாகப்பட்டினம் அதிமுக செயலாளருக்கு சொந்தமான விவசாய நிலங்களின் மதிப்பை உயர்த்துவதற்காகத்தான்.

இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக, அருகாமையில் 2 ஆழ்துளை கிணறுகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. விளைநிலத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை கட்டிவிட்டு, தற்போது அதை திறக்கவில்லை என அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்கூத்து. இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவ கல்லூரி கட்டி திறக்கப்பட்டு உள்ளது. அந்த மருத்துவமனையை திறக்க வேண்டும் என்றால், காவிரியில் இருந்து 9 கிமீ தூரத்துக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்.

இங்கு கடந்த ஆட்சியில் பொதுப்பணி துறை சார்பில் முறையான மண் பரிசோதனை செய்யப்படவில்லை. கூடுதலாக ₹9 கோடி செலவு செய்து, காவிரியிலிருந்து குடிநீர் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் கோமாளித்தனமாக ஆட்சி நடத்திவிட்டு, தற்போது அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேசமாக தெரிவித்தார்.

The post கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நவீன உபகரணங்கள் இயக்கம்; தண்ணீர் இல்லாத நிலத்தில் கல்லூரி கட்டிவிட்டு அதிமுக போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : artist century hospital ,Minister ,Ma. Suframanian ,Alandur ,Artist Century Special Hospital ,Kindi, Chennai ,Tesla ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...