×

9ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறியதாக பெற்றோர் புகார் டிஇஓ நேரில் விசாரணை குடியாத்தம் அரசு பள்ளியில்

குடியாத்தம், ஆக.24: குடியாத்தம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறியதாக பெற்றோர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, டிஇஓ கனிமொழி நேரில் விசாரணை நடத்தினார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 50 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி தனது பெற்றோரிடம் பேசுவதற்காக அறிவியல் ஆசிரியர் ராமன்(45) என்பவரிடம் செல்போனை கேட்டுள்ளார்.

ஆசிரியரும் அவரது செல்போனை கொடுத்துள்ளார். பின்னர், அந்த மாணவி பெற்றோரிடம் பேசிவிட்டு செல்போனை கொடுத்தபோது, ஆசிரியர் ராமன் மாணவியின் கையை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரது பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பள்ளி நிர்வாகத்தினர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, எஸ்பி மணிவண்ணன், டிஎஸ்பி ராமமூர்த்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாமிளா, டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்த தகவலறிந்த சக மாணவிகளின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், டிஇஓ கனிமொழி பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமர்நாத், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, எஸ்பி மற்றும் டிஇஓ ஆகியோர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடக்கிறது என்றார்.

The post 9ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறியதாக பெற்றோர் புகார் டிஇஓ நேரில் விசாரணை குடியாத்தம் அரசு பள்ளியில் appeared first on Dinakaran.

Tags : DEO ,Kudiatham Govt School ,Kudiatham ,Kudiatham Government School ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...