×

குந்தா அணையில் சகதிகள் நிரம்பியதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்

மஞ்சூர், ஆக.24: குந்தா அணையில் நிரம்பியுள்ள சேறு, சகதிகளால் முழுமையாக தண்ணீர் தேக்க முடியாத நிலையில் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், குந்தா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்சார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர், மின்சார உற்பத்திக்கு பின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 மகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்க பாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இதனால், குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீர் ஆதாரமாக குந்தா மற்றும் கெத்தை அணைகள் உள்ளன.

இந்நிலையில், குந்தா, கெத்தை அணைகளை தூர் வராததால் சேறு மற்றும் சகதிகள் நிறைந்துள்ளது. மேலும் மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணைகளில் கலக்கிறது. இதனால், மேற்படி அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது. இதனால், குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது. மேலும், சேறு, சகதிகளால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடைப்பு ஏற்படுவதால் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, குந்தா அணையில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்றி அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குந்தா அணையில் சகதிகள் நிரம்பியதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Kunta Dam ,Manjoor ,
× RELATED பரமக்குடி பகுதியில் ஓபிஎஸ் தீவிர தேர்தல் பிரசாரம்