![]()
மதுரை: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத பணியிட தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டதை திரும்ப பெறக்கோரி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருஷேத்திரா ஆகிய என்ஐடிக்கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்என்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 17ம் தேதி வெளியிட்டுள்ளது.
அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 20 மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண்கள் விவரம் தனியாக பிரிக்கப்படவில்லை. இது, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் வாய்ப்புகளை அதிகரித்து, இந்தி பேசாத மாநிலங்களின் வாய்ப்புகளை கடுமையாக இது பாதிக்கும். இந்த அறிவிப்பு நாட்டின் மொழி மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிராக உள்ளது. அலுவல் மொழி விதிப்படி, மாநிலங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழ்நாட்டிற்கு ஒட்டுமொத்தமாக விதிவிலக்கு அளித்திருப்பதையும் கூட தேசிய தேர்வு முகமை புறம்தள்ளியது ஏற்கத்தக்கதல்ல. எனவே, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான தேர்வுகளில் இந்தி கட்டாய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்.பி கடிதம் appeared first on Dinakaran.
