×

என்எல்சி புதிய பரவனாறு வாய்க்காலில் தண்ணீர் திறப்பால் பல நூறு ஏக்கர் விவசாய நிலத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

*கலக்கத்தில் விவசாயிகள்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி புதிய பரவனாறு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல நூறு ஏக்கர் விவசாய நிலத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கடும் எதிர்ப்பையும் மீறி விளை நிலங்கள், நெற்பயிர்களை அழித்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் இந்த வாய்க்காலில் கத்தாழை கிராம பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட்ட பின்பு என்எல்சி நிர்வாகம் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றி தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை புதிய பரவனாறு வாய்க்காலில் திறந்தது. இதனால் பழைய பரவனாறு வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் பழைய பரவனாறு வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வந்த விவசாயிகள் கலக்கமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இனிமேல் பழைய பரவனாறு மூலம் பல நூறு ஏக்கருக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காது எனவும், இதனால் விவசாயம் செய்ய முடியாது எனவும் வேதனை அடைந்துள்ளனர். ஏனெனில் கத்தாழை, கரைமேடு, மும்முடிசோழகன், கரிவெட்டி மற்றும் பல்வேறு கிராமங்களின் வழியாக செல்லும் பழைய பரவனாறு வாய்க்காலில் என்எல்சியின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அந்த தண்ணீரை விவசாயிகள் மோட்டார் வைத்து எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

தற்போது புதிய பரவனாறு வாய்க்காலில் அந்த தண்ணீர் திருப்பி விடப்பட்டதால் பழைய பரவனாறுக்கு தண்ணீர் வராமல் போகும். இதனால் இதன் மூலம் பாசனம் பெற்று வந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களால் எவ்விதமான பயிரும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் அப்பகுதி விவசாய விளைநிலங்கள் என்எல்சி விரிவாக்க பணிக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அவர்களுக்கான உரிய இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட எந்த விஷயங்களையும் என்எல்சி நிர்வாகம் செய்து தரவில்லை. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

The post என்எல்சி புதிய பரவனாறு வாய்க்காலில் தண்ணீர் திறப்பால் பல நூறு ஏக்கர் விவசாய நிலத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : NLC ,Paravanar channel ,Chethiyathoppu ,Paravanar canal ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...