×

மோகனூரில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பட்டா

நாமக்கல், ஆக.23: மோகனூர் அருகே தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை ராஜேஷ் குமார் எம்பி., வழங்கினார். அங்கு வீடுகட்ட தேவையான உதவிகளை செய்யும்படியும், மாதந்தோறும் மளிகை பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் பரதன் மற்றும் மகள் தீபா ஆகிய இருவரும் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., கலெக்டர் உமா, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் பரதன் மற்றும் தீபா ஆகியோரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தசைச்சிதைவு நோயிக்கு இயன்முறை சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதை மருத்துவர்களிடம் கேட்டறிந்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு ராஜேஷ்குமார் எம்பி., அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை ராஜேஷ்குமார் எம்பி., வழங்கினார். மேலும், அந்த இடத்தில் வீடுகட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ராஜேஷ்குமார் எம்.பி., தனது சொந்த நிதியாக ₹10 ஆயிரத்தை அவர்களுக்கு வழங்கினார். மாதந்தோறும் 25 கிலோ அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். தொடர்ந்து ராமலிங்கம்‌ எம்எல்ஏ., தனது சொந்த நிதியில் இருந்து ₹78 ஆயிரம் மதிப்பிலான படுக்கைகள் மற்றும் சக்கர நாற்காலிகளில் இருந்து மாற்றுவதற்கான இயந்திரத்தினை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், மோகனூர் தாசில்தார் மணிகண்டன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி, பேரூராட்சி தலைவர் வனிதா மோகன், துணைத்தலைவர் சரவணகுமார், செயல் அலுவலர் கோமதி, பேரூராட்சி உறுப்பினர்கள் உடையவர், குமரவேல், சரண்யாதேவி, கிருஷ்ணவேணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மோகனூரில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பட்டா appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Namakkal ,Rajesh Kumar ,Moganur ,
× RELATED நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது