×

இலை தலைவரின் காலில் விழுந்து மாங்கனி கட்சியின் மக்கள் பிரதிநிதி மகிழ்வித்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சி மாநாட்டு செலவை யார் ஏற்பது என்ற சர்ச்சை எந்த மாவட்டத்தில் ரகளையானது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரர் நடத்திய இலைக்கட்சி மாநாட்டிற்கு செல்வதற்கு யார் செலவு செய்வது என்பதில், வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சருக்கும், மாவட்ட முக்கிய நிர்வாகிக்கும் பயங்கர லடாய். மாநாட்டிற்காக மாவட்டத்தில் உள்ள 400 வேன்களையும் புக் செய்தாங்க. ஆள் வந்தாலும், வராவிட்டாலும் வேன் மாநாட்டிற்கு வர வேண்டும் என்று அதன் உரிமையாளர்களுக்கு இலை கட்சி சார்பில் பயங்கர நெருக்கடியாம். முகூர்த்த நாளில் சம்பாதிக்கவிடாமல் கட்சி கூட்டத்துக்கு கார், வேன், பஸ்களை அனுப்ப சொல்லி இலை கட்சிகாரர்கள் இம்சை கொடுக்கிறார்களே என்று நொந்து போய் இருக்கிறார்கள் வேன் உரிமையாளர்கள்.

வேன் வாடகை, ஒரு நபருக்கு ரூ.500, சாப்பாடு, துண்டு என பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும் என்பதால் உஷாரான மாஜி அமைச்சர், நான் சம்பாதித்ததே குறைவு, அதையும் மாநாட்டுக்கு செலவு செய்து நடுத்தெருவில் நிற்பதா… என்னால் பொறுப்பை ஏற்க முடியாது என்று சொல்லி பிரச்னையில் இருந்து எஸ்கேப் ஆயிட்டாராம். இதனால் செலவு மொத்தமும் மாவட்ட முக்கிய நிர்வாகி தலையிலேயே விழுந்ததாம். ‘இவ்வளவு செலவு என்னால் செய்யமுடியாது’ என்று ஜகா வாங்கிக் கொண்ட முக்கிய நிர்வாகி, செலவுகளை பிரித்து மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் தலையில் லாவகமாக கட்டினாராம். ஏற்கனவே முன்னாள் அமைச்சருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காமல் செய்து, அவரது தொகுதியை கைப்பற்றி எம்எல்ஏவாக உள்ள மாவட்ட முக்கிய நிர்வாகி, மாநாடு முடிந்ததும், செலவு பிரச்னையை தலைமையிடம் கூறியுள்ளார்.

இதனால் மாஜி அமைச்சர் மீது கடும் டென்ஷனில் இருக்கிறாராம் சேலத்துக்காரர். விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என்கிறார்கள். மாஜி அமைச்சரோ, சட்டசபை தேர்தலின்போது கரன்சியை இறக்கி சீட்டு வாங்குவேன்… இப்போது பணத்தை செலவு செய்து ஏன் வீணாக்க வேண்டும்…என்றார்’’ என்று சொன்னார் விக்கியானந்தா. ‘‘தாய் பகை… குட்டி உறவு என்பது இலைக்கும் மாங்கனிக்கும் சரியாக பொருந்தும் போல…’’ என்று சிரித்தபடியே சொன்னார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டத்தில் சர்ச்சைக்கு பெயர்போன அந்த டேம் தொகுதி மக்கள் பிரதிநிதி, அடிக்கடி வில்லங்கத்தில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து ஆபீஸ் வாசலில் நோட்டீஸ் ஒட்டினார்.

ஆய்வுக்கு சென்றிருந்த அதிகாரிகள் ஓடோடி வந்து அவரை ஆபீஸ் ரூமுக்கு அழைச்சிட்டு போனாங்க. திரும்பி வரும்போது அவருக்கு முகத்தில் அதிர்ச்சியின் அளவு அதிகமாகவே இருந்ததாம். இப்படி சர்ச்சையில் சிக்குவதும் பின்னர் பின்வாங்குவதும் அவருக்கு கைவந்த கலையாம். மாங்கனியின் மக்கள் பிரதிநிதி தொடர்ந்து இதேபோல செய்வதால், டேம் பகுதியில் உள்ள அதிகாரிகள் நிம்மதியாக பணியாற்ற முடியாத நிலை காணப்படுகிறதாம். எந்த நேரத்திலும் ஒட்டுமொத்த அதிகாரிகளும் அவருக்கு எதிராக திரண்டு வருவார்கள் என்ற என்ற நிலை உருவாகி இருக்காம். இதுஒருபுறமிருக்க, கூட்டணி தொடர்பாக கட்சியின் மாம்பழ தலைமை இலை கட்சியை எதிர்த்து நிற்கும் சூழலில், இலைக்கட்சியின் சேலத்துக்காரரை திடீரென சந்திச்சு பேசினாராம்.

பூங்கொத்தோட நெடுஞ்சாலை நகருக்கு சென்ற அவர் டமாருன்னு சேலத்துக்காரரின் காலில் விழுந்து ஆசி வாங்கினாராம். இதனை இலைக்கட்சியின் தலைவர்கூட எதிர்பார்க்கலையாம். வெட்டிங்டே வாழ்த்து சொன்னதும் ரொம்பவே பூரிச்சி போயிட்டாராம். எனது கட்சிக்காரர்கள் கூட வாழ்த்து சொல்லலையேன்னு சிறிது வருத்தத்துடன் சேலம்காரர், மாம்பழ கட்சியின் மக்கள் பிரதிநிதியிடம் சொன்னாராம். ஆனா டேம் காரர் போனதே தனக்கு தொடர்ந்து வரும் எதிர்ப்பை சமாளிக்கணும் என்பதற்காகத்தான் என்று மாம்பழக்காரங்க பேசிக்கிறாங்க… மாம்பழ தலைமை பகையாக இருப்பதை சாதகமாக்கி, அவர்களை குழப்பவே சேலம்காரரை சந்தித்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி தன் பதவியை காப்பாற்றி கொள்ளவே இந்த நாடகம்…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பில் பாஸ் ஆகணும்னா, லகரங்களை கொடுக்க வேண்டும் என்று யார் அன்பாக மிரட்டியது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல ஆறு அணி ஒன்றியத்துல, 38 ஊராட்சிகள் இருக்குது. இந்த ஊராட்சிகள்ல பிரதமர் வீடு கட்டுற திட்டத்துல மானியத்தொகை வாங்குறதுக்குள்ள பயனாளிங்க படாதபாடு படுறாங்க. ஆறு அணி ஒன்றியத்துல இந்த திட்டத்துல அழகை பெயரில் வெச்சிருக்குற ஒரு அலுவலர் இருக்கார். இவருதான் வீடு கட்டுற திட்டத்துக்கான மானியத்தொகை வேண்டும்னா, 3கே கொடுக்கணும்னு ரொம்பவே கறார் காட்டுறாராம். 3 கே இல்லாம பில் பாஸ் ஆகாதுன்னு சொல்றாராம். இதனால, மக்கள் மானியத்தொகைய பெற முடியாம பாதிக்கப்பட்டு வர்றாங்க.

இதுல பல பேர் வீடு கட்டியே முடிச்சிட்டாங்களாம். ஆனாலும் அவங்களுக்கு மானியம் கிடைக்கவே இல்லையாம். யாராவது கேட்டா இதுல ஒரு பிரச்னை இருக்குதுனு சொல்லி அலைக்கழிக்கிறாராம். இதனால பல பயனாளிகள் வீடு முழுசா கட்டிமுடிக்க முடியாம அவஸ்தை படுறாங்க. இந்த திட்டத்துல பில் பாஸ் செய்றேன்னு சொல்லியே பல எல்களை சேர்த்துட்டாராம் பெயரில் அழகை கொண்டவர்… பாதிக்கப்பட்டவர்கள் உயரதிகாரிகளுக்கு பெட்டிஷனை தட்டிவிட்டு பணம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா ‘‘ கூட இருந்தே இப்படி செஞ்சுட்டாங்களே என்று பவர்புல் பெண்மணி மீது டென்ஷனில் இருப்பது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி நிர்வாகத்தை நடத்துவதில் நாங்கள் அண்ணன், தங்கைகள், எங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்வோம் என பாச மழை பொழிகிறார் பவர்புல் பெண்மணி. இணக்கமாக செயல்படுவதாக காட்டிக்கொண்டாலும், இசையின் சைலன்ட் டிரீட்மென்டால் புல்லட்சாமி நொந்து நுடுல்ஸ் ஆகி வருகிறாராம். தற்போதைய பவர்புல் பெண்மணி , புல்லட்சாமியை ஊமை குத்தாக குத்தி அடித்து நொறுக்கி வருகிறாராம். இதனை வாய்திறந்து கூட பேசமுடியாமல் புல்லட்சாமி தவித்து வருகிறார்.

கோப்புகளில் கையெழுத்திட்டு அனுமதி அளிக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே நிர்வாகத்தில் நான் செய்வதே சரியென இசை நடந்து கொள்கிறாராம். இந்த போக்கு புல்லட்சாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நியமனம், பதவி உயர்வு அளிக்கப்படும்போது, இதற்கான உத்தரவு நகலை முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது புல்லட்சாமிக்கு எதுவும் தெரியப்படுத்துவதில்லையாம்… இதனால் பவர்புல் பெண்மணி மீது டென்ஷனில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை தலைவரின் காலில் விழுந்து மாங்கனி கட்சியின் மக்கள் பிரதிநிதி மகிழ்வித்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mangani ,wiki Yananda ,Leaf ,Party ,Conference ,Uncle ,Peter ,Mangani Party People's Representative ,wiki ,Dinakaran ,
× RELATED மாங்கனிக்கு பெயர் போன சேலம் மக்களவை தொகுதியை வசியப்படுத்தப்போவது யார்