×

மாங்கனிக்கு பெயர் போன சேலம் மக்களவை தொகுதியை வசியப்படுத்தப்போவது யார்

தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் சேலம் 15வது தொகுதியாகும். சங்க காலத்தில் அதியமானின் ஆட்சி பகுதியாக இருந்த சேலம் பின்னர் சேரர்கள், நாயக்கர்கள், ஹைதர் அலி ஆகியோரின் கட்டுப்பாட்டில் அடுத்தடுத்து வந்தது. 1799ல் கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய நிர்வாக பகுதியாக சேலம் மாறியது. ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு ஆங்கிலேயர்களால் கோடை வாழிடமாக அடையாளப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அணை மிகத் தாழ்வான பகுதியில் உள்ளதால், அணை நீரில் 10% கூட, சேலம் மாவட்டத்துக்குப் பயன்படுவதில்லை. எனினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக மேட்டூர் காவிரி நீர் கிடைத்து வருகிறது.

ஏரிப் பாசனத்தை நம்பியிருந்தாலும் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், சிறு தானியங்கள் உள்ளிட்டவை பரவலாகப் பயிரிடப்படுகிறது. மரவள்ளிப் கிழங்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி உற்பத்தி, வெண்பட்டு வேட்டி உற்பத்தி, வெள்ளிக் கொலுசு உற்பத்தி, மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி உற்பத்தி ஆகியவை பிரதான தொழிலாக இருக்கின்றன. சேலம் என்றதும் மாம்பழமும் ஞாபத்திற்கு வரும். ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

திருச்செங்கோடு தொகுதியில் உள்ளடங்கியிருந்த எடப்பாடி சட்டமன்ற தொகுதியானது 2008ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு காரணமாக சேலம் தொகுதியின் கீழ் கொண்டுவரப்பட்டது. கொங்கு வேளாளக் கவுண்டர், வன்னியர், முதலியார் சமூக மக்கள் அதிகம் உள்ளனர். 8,23,336 ஆண் வாக்காளர்கள், 8,25,354 பெண் வாக்காளர்கள், 221 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 16,48,911 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தொகுதியில் திமுக – அதிமுக இடையே போட்டி என்றாலும் 1952ம் ஆண்டு தேர்தலில் தொடங்கி கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே அதிகமுறை சேலத்தில் வெற்றிபெற்றுள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர் செம்மலை 2009ல் இந்த தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கொங்கு மண்டலத்தில் ஒரு பகுதியான சேலத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளது என்றாலும் கடந்த 2019 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அதிமுக வேட்பாளரான சரவணனை வீழ்த்தி 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி, அதிமுக வேட்பாளர் விக்னேஷ், பாஜ கட்சியின் பாமக வேட்பாளர் அண்ணாதுரை, நாதக வேட்பாளர் மனோஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தொகுதியில் நீண்ட வெற்றி வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சியின் திமுக கூட்டணிக்கு மீண்டும் இங்கு வாய்ப்பு கிடைக்குமா, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வரின் சொந்த மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என சொல்லும் சேலம் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப்போது யார் என்பது ஜூன் 4ம் தேதி தெரியும்.

The post மாங்கனிக்கு பெயர் போன சேலம் மக்களவை தொகுதியை வசியப்படுத்தப்போவது யார் appeared first on Dinakaran.

Tags : SALEM ,DISTRICT ,MANGANI ,Tamil Nadu ,Adhyaman ,Zharas ,Naykhars ,Haider Ali ,East India Company ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...