×

பாரம்பரிய விதைத் திருவிழாவில் தண்டட்டி பாட்டிகளுக்கு முறம் புடைத்தல் போட்டி: ஆக.27ல் நடக்கிறது

 

மதுரை, ஆக. 22: சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு, தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், தென் மாவட்ட அளவிலான விதைத் திருவிழா மற்றும் கண்காட்சி வரும் 27ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை கப்பலூர் – திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. இதுகுறித்து தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்னவயல் காளிமுத்து கூறியவதாவது: உடல் ஆரோக்கியத்திற்காக சிறுதானியங்கள் மற்றும் இயற்கை விதைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் தர வேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர்.

இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென் மாவட்ட அளவிலான விதைத் திருவிழா மற்றும் கண்காட்சி வரும் 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கப்பலூர் – திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. இத்திருவிழாவை மதுரை ஐகோர்ட் கிளை பதிவாளர் துவக்கி வைக்கிறார். இதில் 50 வகை சிறுதானியங்கள், 1200 பாரம்பரிய நெல் வகைகள், 150 வகை காய்கறி விதைகள், 800 கிழங்கு வகைகள், 1600 மர வகைகள், 10,000 மூலிகை வகைகள் போன்றவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

இத்திருவிழாவில் தண்டட்டி அணிந்த பாட்டிகளுக்கு சுளகு(முறம்) புடைத்தல் போட்டி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், பொம்மலாட்டம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. மேலும், பாரம்பரிய சமுதாய விதை வங்கி துவக்க விழாவும் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 99435-95340 என்ற செல்போன் எண் மூலம் பெயர்களை வரும் 25ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் நெல் விதைகள் 2 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாரம்பரிய விதைத் திருவிழாவில் தண்டட்டி பாட்டிகளுக்கு முறம் புடைத்தல் போட்டி: ஆக.27ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Dandati Patti ,Madurai ,International Year of Small Grains ,South District Organic Farmers Federation ,South ,seed ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...