புதுடெல்லி: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி ஏற்பட்ட இனக் கலவரத்தினால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் இழப்பீடு குறித்து மேற்பார்வையிட மூன்று முன்னாள் பெண் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்க கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஷாலினி பி ஜோஷி மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு, அடையாள ஆவணங்களை மறுசீரமைப்பது, இழப்பீட்டை மேம்படுத்துவது மற்றும் அதன் செயல்பாட்டை எளிதாக்க வல்லுநர்களை நியமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மூன்று அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது.
இவற்றை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், நீதிபதி மிட்டல் குழுவின் செயல்பாட்டை எளிதாக்கவும், குழு செய்யும் பணிகள் பற்றிய விவரங்களை தெரிவிக்க இணையதளம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆகஸ்ட் 25ம் தேதி சில நடைமுறை உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறியது. இந்த மூன்று அறிக்கைகளின் நகல்களையும் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும், ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உதவும் வழக்கறிஞருக்கும் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
The post மணிப்பூர் கலவரம்: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கீதா மிட்டல் குழு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.