×

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 3 மணி நேரத்தில் போகலாம்: 262 கி.மீ. தூர பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம்


சென்னை – பெங்களூரு இடையே 262 கி.மீ., தூரம் கொண்ட பசுமைவழி விரைவுசாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்தால், சென்னையில் இருந்து 3 மணிநேரத்தில் பெங்களூருவை அடையலாம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் வணிக போக்குவரத்து, சுற்றுலா, மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நெடுஞ்சாலைகளை அமைத்து, அதனை பராமரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில நெடுஞ்சாலை துறைதான் சாலை, பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை, மாநிலத்தில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவாக இலக்கை அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தன்னிச்சையாகவும், மாநில அரசுடன் இணைந்தும் பல்வேறு சாலை, மேம்பால திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் 262 கி.மீ., நீளத்துக்கு பசுமைவழி விரைவு சாலை அமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறை தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல, நாடு முழுவதும் 26 பசுமைவழி விரைவு சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், சென்னை- பெங்களூரு விரைவுசாலை பணிகள் தொடங்கப்பட்டு ஜெட்வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியாவின் மிகப்பெரிய பசுமைவழி சாலைகளில் இதுவும் ஒன்றாக அமையும். சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே தற்போது இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஒசூர், சந்தபுரா, எலக்ட்ரானிக் சிட்டி வழியாக பெங்களூருவுக்கு 372 கி.மீ. நீளமுள்ள என்.எச் 48 தேசிய நெடுஞ்சாலை, மற்றொன்று கோயம்பேடு, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சித்தூர், முல்பகால், ஓசகோட்டே வழியாக பெங்களூருவுக்கு 335கி.மீ. நீளமுள்ள என்.எச்.75 தேசிய நெடுஞ்சாலை. தற்போது அமைக்கபட்டு வரும் விரைவு சாலை இந்த 2 நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமையவுள்ளது.

தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. இந்த விரைவு சாலையில் 262 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கலாம். காரணம் வாகனம் செல்லும் வேகம் 120 கி.மீட்டராக இருக்கும். இது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது, தமிழ்நாட்டில் 85 கி.மீ. நீளமும், ஆந்திராவில் 71 கி.மீ. நீளமும், கர்நாடகவில் 106 கி.மீ. நீளமும் சாலை அமைகிறது. ரூ..17,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரைவு சாலை 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 8 வழிச்சாலையாகவும் மாற்றும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது:

தென்னிந்தியாவின் முக்கியமான இரண்டு நகரங்களை இணைக்கும் இந்த சாலை 3 மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுடன் சென்னை துறைமுகத்தை இணைக்கும் வகையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை-பெங்களூரு இடையே சரக்கு போக்குவரத்து விரைவாக நடைபெறும். மேலும். இந்த சாலையின் அமைந்தவுடன் அதன் அருகே பல தொழிற்சாலைகளும் வர உள்ளது. இதன் மூலம் வேகமான மற்றும் தரமான சாலைகளால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் வேகமாக நடைபெறும் என்பதால் பெரும்பாலான தொழிற்சாலைகளின் முதல் தேர்வாக இந்த சாலையே அமையும்.

மேலும் இந்த விரைவு சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையதால் நுழைவு கட்டுப்பாடு சாலையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த விரைவு சாலையில் என்னென்ன வாகனங்கள் செல்ல வேண்டும். இச்சாலையில் செல்ல வேக கட்டுப்பாடுகள் விதிமுறைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு வாகனத்தின் தரம் உள்ளிட்டவை பூர்த்தி செய்யும் வாகனங்கள் மட்டுமே விரைவு சாலையில் செல்ல முடியும். குறிப்பாக இந்த சென்னை- பெங்களூரு பசுமைவழி விரைவு சாலையின் வேக கட்டுப்பாடு 120 கி.மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிமையான பயணம் மேற்கொள்ள முடியும்.

மேலும் இந்த விரைவு சாலைக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளும் விரைவு சாலையுடன் இணைக்கப்படும். இதன்மூலம் அனைத்து பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும். இந்த 262கி.மீ. விரைவு சாலை அமைக்கும் பணி நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓசகோட்டே முதல் பெத்தமங்களா வரை 71கி.மீ., பெத்தமங்களா முதல் குடிபலா வரை 85கி.மீ., குடிபலா முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 106கி.மீ., ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயல் வரை 22.6 கி.மீ. என 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயல் வரை 22.6 கி.மீ. சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதை தவிர்த்து மீதமுள்ள 3 கட்டங்களில் 50 சதவீததிற்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 162 பாலங்கள், 17 மேம்பாலங்கள், வாகனங்கள் உள்ளே வந்து வெளியே செல்ல 41 இடங்களும், அதேபோல பாதசாரிகளுக்கு 52 இடங்கள் இந்த விரைவு சாலையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் முதலில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் பணிகளை முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 3 மணி நேரத்தில் போகலாம்: 262 கி.மீ. தூர பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru ,Greenway Expressway ,Bangalore ,Greenway ,
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...