×

47 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் ஏவப்பட்டது ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது: இந்தியா வரலாறு படைக்க வாய்ப்பு

மாஸ்கோ: லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கினால் நிலவின் தென்துருவத்தில் முதலில் தரையிறங்கிய நாடு என்ற வரலாறு படைக்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலவில் நிரந்தரமாக நிழலாக காணப்படும் துருவ பள்ளங்களில் நீர் இருக்கலாம். பாறைகளில் உறைந்த நீரை எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் காற்று மற்றும் ராக்கெட் எரிபொருளாக மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புவதால் சந்திரனின் தென்துருவம் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த 14ம் தேதி விண்ணில் ஏவியது.

தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3, நாளை மறுநாள் நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. இதே போல், ரஷ்யாவும் கடந்த 1976ம் ஆண்டுக்கு பிறகு, 47 ஆண்டுகளுக்கு பிறகு, நிலவை ஆய்வு செய்ய சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலத்தை வாஸ்டோக்னி ஏவுதளத்தில் இருந்து கடந்த 11ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 1,800 கிலோ எடை கொண்டதாகும். நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், எரிபொருள், ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை 5 நாளில் சென்றடையும். அதன் பிறகு, 4 முதல் 5 நாட்கள் நிலவின் பாதையில் சுற்றி வந்த பின்னர் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான இடத்தை ஆய்வு செய்து தரையிறங்கும்.

அதன் பிறகு, நிலவில் ஓராண்டு ஆய்வு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.மேலும், நிலவின் தென் துருவத்தில் உள்ள மண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் கால் பதித்த நாடுகளாக இருந்தன. ஆனால் அவை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை. தற்போது இந்தியா, ரஷ்யா மட்டுமே இதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. ரஷ்யாவின் லூனா-25, சந்திரயான்-3 விண்கலம் 23ம் தேதி தரையிறங்குவதற்கு முன்னதாக, 21ம் தேதி (இன்று) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரஷ்யாவின் ஆளில்லா ரோபோ லேண்டர் நிலவில் மோதி நொறுங்கியதாக நேற்று அறிவிக்கப்பட்டது. கட்டுப்பாடற்ற சுற்றுவட்டப்பாதையில் சுழன்றதாலும் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுப்பாதைக்கு தயாராகும் போது விண்கலத்துடனான தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்தது. இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் டெலிகிராம் வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரோபோ லேண்டர் கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் நகர்ந்தது. நிலவின் மேற்பரப்பில் மோதியதன் விளைவாக தொடர்பை இழந்தது. இதனால், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இது ரஷ்யாவின் 47 ஆண்டு கால நிலவு பயணத்துக்கான முயற்சியின் தோல்வியாக கருதப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. லூனா-25 விண்கலம் திட்டமிட்டப்படி இன்று தரையிறங்கி இருந்தால், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்று இருந்திருக்கும். தற்போது ரஷ்யா இந்த முயற்சியில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கருவி, நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு தரையிறங்க இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பட்சத்தில், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

The post 47 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் ஏவப்பட்டது ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது: இந்தியா வரலாறு படைக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Russia ,India ,Moscow ,Russian Space Exploration Agency ,Dinakaran ,
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...