×

ஒன்றிய அரசின் இரண்டு முகமைகள் மூலம் வடமாநிலங்களில் நாளை முதல் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை

புதுடெல்லி: ஒன்றிய அரசின் இரண்டு முகமைகள் மூலம் வடமாநிலங்களில் நாளை முதல் கிலோ ரூ.40-க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று ஒன்றிய நுகர்வோர் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மானிய விலையில் கிடைக்காதா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் பருவமழை பெய்ததால் தக்காளி பயிரில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக பயிர் கெட்டுப்போனது. இது தவிர, பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலால், தக்காளி உற்பத்தியும் குறைந்தது.

பல இடங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தக்காளி விதைப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக கடந்த ஜூன் மாதம் கிலோ ரூ. 35 முதல் ரூ. 40 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த ஓரிரு மாதங்களில் தக்காளி விலை 6 மடங்கு வரை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தக்காளி விலை கிலோ 150ல் இருந்து 250 ரூபாய் வரை விற்பனையானது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த, ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎப்), தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாபெட்) ஆகியவை தக்காளியை நேபாளத்தில் கொள்முதல் செய்துள்ளன. இவை லாரிகள் மூலமாக கடந்த ஜூலை 14ம் தேதி தற்போது வரை 15 லட்சம் டன் தக்காளியை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அவை முக்கிய நுகர்வு மையங்களில் மானிய விலையில் விற்பனை செய்துள்ளன. டெல்லி, ராஜஸ்தான் (ஜெய்ப்பூர், கோட்டா), உத்தரபிரதேசம் (லக்னோ, கான்பூர் வாரணாசி, பிரயாக்ராஜ்), பீகார் (பாட்னா, முசாபர் நகர், அர்ரா, பக்சார்) ஆகிய மாநிலங்களில் இவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

என்சிசிஎப், நாபெட் ஆகியவை கொள்முதல் செய்த தக்காளியை தொடக்கத்தில் கிலோ ரூ.90க்கு விற்பனை செய்தன. பிறகு ஒரு கிலோ ரூ.70 ஆக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.50 வரை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎப்), தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாபெட்) மூலம்

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. அவை குறிப்பிட்ட மையங்களுக்கு மானிய விலையில் அனுப்பி வைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. நாளை முதல் (ஆக. 20) கிலோவிற்கு ரூ.40 என்ற விலையில் தக்காளியை விற்பனை செய்யப்படும்.

சில்லறை விலையில் கடைசியாக (ஆக. 15)) கிலோவுக்கு ரூ.50 வரை குறைத்து விற்கப்பட்டது. தற்போது நாளை முதல் மேலும் ரூ. 10 குறைத்து ரூ. 40 ஆக விற்கப்படும். தற்போது வரை 15 லட்சம் கிலோ தக்காளி மேற்கண்ட இரு ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, முக்கிய நுகர்வோர் மையங்களில் சில்லறை விற்பனையில் விற்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மொத்த விற்பனையில் கடந்த 12ம் தேதி கிலோ ரூ.71, 14ம் தேதி கிலோ ரூ. 67, 16ம் தேதி முதல் இன்று வரை கிலோ ரூ. 65 வரை விற்கப்படுகிறது. அதே சில்லறை விற்பனையில் ரூ. 83 வரை விற்கப்படுவதாக காய்கறி விற்பனை நிலைய தினசரி விலை நிர்ணய இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டாலும், அதன் பலன்கள் வடமாநிலங்களுக்கு மட்டுமே செல்வதாக கூறுகின்றனர். தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் முகமைகள் மூலம் மானிய விலையில் தக்காளி கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தக்காளி விலையில் ெபரிய அளவில் மாற்றமில்லை என்று நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.

The post ஒன்றிய அரசின் இரண்டு முகமைகள் மூலம் வடமாநிலங்களில் நாளை முதல் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : North States ,Union Government ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை