தினந்தோறும் இறைவனை வழிபட வேண்டும் என்பது அவசியமா?
– பொன். முத்துக்குமார், பணகுடி.
மூச்சுவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் இறை வழிபாடும். அதே சமயம், சுவாசிப்பது எப்படி இயல்பாக நிகழ்கிறதோ அப்படியே கடவுளை நினைப்பதும் இயல்பாக நடைபெற வேண்டும். எந்தச் செயலை செய்யும்போதும் இறைவனின் நினைவு மூச்சுக்காற்று போல் நமக்குள் இருத்தல் வேண்டும்.
மொத்தத்தில் விழித்திருக்கும் நேரமெல்லாம் இப்படி இறை நாமத்தை சுவாசத்துடன் உச்சரித்து வரும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பொதுவாகவே பூஜைகளை நமக்கு நேரம் கிடைக்கும்போது செய்யலாம். எல்லா பூஜைகளையும்விட மானஸ பூஜை அதாவது, மனதால் நினைத்து வழிபடுவது மிகமிகச் சிறந்தது. அதை தினமும், ஒவ்வொரு விநாடியும் செய்யலாமே!
திருமால் மட்டும்தான் அவதாரங்கள் எடுத்திருக்கிறார். சிவன், முருகன் போன்ற தெய்வங்கள் அவதாரம்
எடுத்திருக்கிறார்களா?
– சதீஷ், தண்டலம்.
அவதாரம் என்றால் இறங்கி வருவது என்பதுதான் அர்த்தம். மனித உருவில் அப்படி இறங்கிவந்து, நம்மைக் கை தூக்கி விடுவதற்காக நம்மோடு வாழ்ந்து காட்டி நம்மை நல்வழிப்படுத்துவதுதான் அவதாரத்தின் நோக்கம். சிவன் அப்படி மனிதவடிவில் வந்து பிட்டுக்கு மண் சுமந்திருக்கிறார், விறகு வெட்டியாகவும் வந்திருக்கிறார். திருவிளையாடற் புராணத்தில் இவையும் இவை போன்ற மொத்தம் 63 சிவ அவதாரங்களும் விளக்கப்பட்டுள்ளன. வேலன்கூட வேடனாகவும், விருத்தனாகவும் வந்திருக்கிறாரே! இதை கந்தபுராணம் விவரிக்கிறது.
ராமலிங்க சுவாமிகள் வடலூரில் இறைவனை ஜோதி தரிசனமாகக் கண்டார். ஏன், உருவவழிபாட்டினை அவர் தவிர்த்தார்?
– பிரவின், சந்தவாசல்.
சாதாரண நிலைகளைக் கடந்தவர் ராமலிங்க சுவாமிகள். அவர் கடவுளை ஜோதி சொரூபமாக உணர்ந்திருக்கிறார். பக்தியில் அதிகமாக முன்னேறு பவர்களுக்கு அந்த நிலை ஏற்படும்! ராமலிங்க சுவாமிகளும் உருவத்தை வழிபட்டிருக்கிறார். திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், கந்தக் கோட்டம் குமரனையும் வழிபட்டவர் அவர்.
எதற்குதான் விளம்பரம் என்று கிடையாதா? இறைப் பணிகளுக்குக் கூடவா விளம்பரம் செய்துகொள்ள வேண்டும்?
– கே. கிருஷ்ணசாமி, நடுவயல்.
தவறில்லை என்றுதான் சொல்வேன். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள், தம் செயலையும் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்களே, அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். உதாரணமாக ஒரு அன்பர் கோயிலுக்கு நாலைந்து டியூப் லைட்டுகளை அன்பளிப்பாக கொடுத்து, அவற்றில் இன்னார் உபயம் என்று தன் பெயரைப் போட்டுக்கொள்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அதைப் பார்க்கும் சிலர், ‘தன் பெயரை எழுதி முழு வெளிச்சமும் கிடைக்காமல் செய்துவிட்டாரே’ என்று விமர்சிக்கலாம்.
அதே சமயம், அதைப் பார்க்கும் இன்னொருவர், ‘அட, நாமும் இப்படி ஏதாவது செய்து நம் பெயரையும் விளம்பரப்படுத்திக்கொள்ளலாமே’ என்று நினைக்கலாம். இதனால் விளம்பர ஆர்வம் அதிகரித்தாலும், கோயிலுக்கான ஆக்கப்பூர்வமான செயல்களும், வசதிகளும் பெருகுகிறதே, இதையும் நாம் கவனிக்க வேண்டும்.
மகான்களுக்குகூடத் துன்பம் அனுபவிக்க நேருகிறதே? அது எப்படி?
– கார்த்திக், திருவள்ளூர்.
உடம்புதான் துன்பம் அனுபவிக்கிறது. ஆத்மா அனுபவிப்பதில்லை. சதாசிவப் பிரம்மேந்திரர், பகவான் ரமணர் போன்ற பெரியோர்கள் இவ்வாறு உடம்பில் வேதனையை அனுபவித்தவர்கள். ஆனால், துன்பம் என்று முகம் சுளித்ததில்லை. கண்களில் நீர் தளும்பக்கூட இல்லை. ஏனென்றால், அந்தத் துன்பம், அவர்களுடைய ஆத்மாவைத் தொடவில்லை. நாம் துன்பம் என்று அனுபவிப்பவை, ‘எனது’ என்ற புறப்பற்றினால் ஏற்படுவதுதான்.
அந்த எண்ணம் நீங்கினால், ஆசையே தோன்றாது. நமக்குச் சொந்தமான ஒரு பொருளை மற்றொருவன் அபகரித்துக்கொண்டால், உடனே நமக்கு கோபம் வருகிறது. கோபத்தால் வன்மம் பெருகுகிறது. செய்யத்தக்கவை இன்னவை, செய்யத்தகாதவை இன்னவை என்ற நல்லுணர்ச்சி ஒழிகிறது. எதையும் செய்யத் துணிகிறோம். இவ்வளவுக்கும் காரணம் ‘எனது’ என்ற உணர்வுதான். அப்படி இல்லாமல் ஒதுங்கிக் கொண்டே வந்தால் துன்பமும் விலகிக்கொண்டே வரும்.
தொகுப்பு: அருள்ஜோதி
The post தினந்தோறும் இறைவனை வழிபட வேண்டும் என்பது அவசியமா? appeared first on Dinakaran.