×

சுரங்க பணியின்போது உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்?.. என்எல்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: என்.எல்.சி. சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகள் மூலம் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, என்.எல்.சி. அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, முன்ஜாமீன் வழங்க கூடாது. சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடோ அல்லது கருணைத் தொகையோ வழங்கப்படவில்லை. விபத்துகள் தொடர்பாக காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்.எல்.சி.க்கு சாதகமாக செயல்படுகிறது என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்செல்வம், என்.எல்.சி.யில் தொடர்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர் நித்தியானந்தம், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுவதோடு, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. இடையீட்டு மனுதாரர்கள் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிதாக்கி அரசியல் செய்கிறார்கள். தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஓரிரு விபத்துகள் என்றால் தொழிலாளர்களின் கவனக்குறைவால் மரணம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தொடர்ச்சியாக விபத்துகள் நிகழ்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்று கேள்வி எழுப்பி விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சுரங்க பணியின்போது உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்?.. என்எல்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : High Court ,NLC ,Chennai ,N.L.C. ,Madras High Court ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணி மையங்களுக்கு...