×

வீட்டுச்சுவையில் வெரைட்டி சாதம்!

20 ஆண்டுகளாக இயங்கும் நம்பிக்கை உணவகம்எந்தப் பொருளை விற்றாலும் தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிலும் உணவு விசயத்தில் இன்னும் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும். இந்த உணவை நாம் சாப்பிட வேண்டும். நம் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இதனால் நமக்கு எதுவும் ஆகாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் எதைக் கொடுத்தாலும் மக்கள் தேடி வந்து வாங்குவார்கள். அப்படித்தான் கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் பழைய லிபர்டி தியேட்டர் அருகே உள்ள அண்ணாமலையார் டிபன் சென்டரை மக்கள் தேடி வருகிறார்கள்.கடைக்கு பெயர்ப்பலகையே இல்லை. வருபவர்கள் நின்றுதான் சாப்பிட வேண்டும். மிக சிறிய இடம்தான். ஆனால் 20 ஆண்டுகளாக இந்தக் கடை இங்கே இயங்கி வருகிறது. பலர் இந்தக்கடையின் ரெகுலர் கஸ்டமர்கள் ஆகியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சாதாரண வேலைகளில் ஈடுபடுகிறவர்கள், அலுவலகம் செல்வோர் என பல தரப்பினர் அண்ணா மலையார் டிபன் சென்டரைத் தேடி வருகிறார்கள்.

காலை, இரவில் டிபன் கிடைக்கிறது. மதியம் வெரைட்டி சாதம். ஆனால் எந்த உணவிலும் அஜினோமோட்டோ போன்றவற்றைக் கலப்பதில்லை. வீட்டில் எப்படி செய்வோமோ, அப்படித்தான் சமைக்கிறார்கள். இதனால் இந்த வீட்டுச்சுவை அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்கிறார்கள். இந்தக் கடையின் உரிமையாளர்களான கீதாவும், பூபாலனும். காலையில் டிபன் முடிந்து, மதியம் வெரைட்டி சாத தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கீதா, பூபாலன் தம்பதியை சந்தித்தோம்…எனக்கு சென்னைதான் பூர்வீகம். இவருக்கு திருவண்ணாமலை. நான் டிப்ளமோ இன் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன். இவரு பிஎஸ்சி படிச்சதோட, ஐடிஐல எலெக்ரிக்கலும் படிச்சிருக்காரு. 40 வருசத்துக்கு முன்பு இவரு வேலை தேடி சென்னை வந்தாரு. அப்போ வைண்டிங் கடையில வேலை பார்த்து, அந்த தொழிலைக் கத்துக்கிட்டு இந்த இடத்தில வைண்டிங் கடை வச்சாரு. அப்புறம் குழந்தைகளை பார்த்துக்க முடியலன்னு வைண்டிங் கடையை எடுத்துட்டு ஜூஸ் கடை ஆரம்பிச்சோம். 20 வருசத்துக்கு முன்னாடி இந்த டிபன் கடையை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல டிபன் மட்டும்தான் கொடுப்போம். நல்லா ருசியா, விலை கம்மியா கொடுத்ததால எல்லோரும் வந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க.

பக்கத்துல ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறதால ரயில்ல இருந்து இறங்கி வரவங்க, ரயில் ஏறப் போறவங்க எல்லாம் இங்க வந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க. பக்கத்துல லிபர்டி தியேட்டர் இருந்ததால, படம் பாக்க வரவங்களும் சாப்பிடுவாங்க. இதுபோல ஆதரவு பெருகினதால மதியம் சாப்பாடு போட ஆரம்பிச்சோம். அதுக்கும் நிறைய கஸ்டமர் வர ஆரம்பிச்சாங்க. அப்புறமாக நைட்ல டிபன் கொடுக்க தொடங்குனோம். இப்ப 3 வேளையும் டிஷ் ரெடி பண்றோம். காலையில இட்லி, தோசை, பூரி, பொங்கல், கிச்சடி ரெடி பண்றோம். இட்லி 12 ரூபாய்க்கும், பூரி 40 ரூபாய்க்கும், பொங்கல், கிச்சடி 35 ரூபாய்க்கும், சாதா தோசை 40 ரூபாய்க்கும், கல்தோசை 20 ரூபாய்க்கும் தரோம். மதியத்துல மீல்ஸ் கொடுத்தோம். இப்ப வேலை அதிகமானதால லஞ்ச்ச நிப்பாட்டிட்டோம். வெரைட்டி சாதம் மட்டும் தரோம். சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், கீரை சாதம், வெஜிடபிள் சாதம்னு 6 வகையான சாதம் ரெடி பண்றோம். வெஜிடபிள் சாதத்துக்கு மட்டும் 45 ருபா வாங்குறோம். மத்த சாதம் எல்லாம் 40 ரூபாய்தான். இதில கீரை சாதம் ஒவ்வொரு நாளும் ஒரு வெரைட்டியா மாறும். ஒரு நாள் ஏதாவது ஒரு கீரை இருக்கும். மத்த நாள்ல புதினா சாதம், கத்திரிக்காய் சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், குடைமிளகாய் சாதம்னு மாத்தி மாத்தி செய்வோம். எல்லா சாப்பாட்டுக்கும் பொன்னி புழுங்கல் அரிசிதான் பயன்படுத்துறோம். தயிர்சாதத்துக்கு சாப்பாட்டு பச்சரிசி பயன்படுத்துறோம். அதுதான் நல்லா குழஞ்சி ருசியா இருக்கும்.

பொங்கலுக்கு பொங்கலுக்கான பச்சரிசி போடுறோம். அதுவும் நல்ல ருசியா இருக்கும். வெஜிடபிள் சாதத்துக்கு பாஸ்மதி அரிசி போடுறோம். எல்லா அரிசியையும் தரமா பார்த்து வாங்குவோம். பழைய அரிசியாகவும் பார்த்து வாங்குவோம். அதுதான் நல்ல டேஸ்ட் கொடுக்கும். அதேபோல மசாலா, காய்கறின்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்குவோம். டிபனுக்கு நல்ல உளுந்தா வாங்கி பயன்படுத்துறோம். அதேபோல சட்னிக்கு முதல் தர பொட்டுக்கடலைதான் பயன் படுத்துறோம். நைட்ல இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா கொடுக்குறோம். அதோட நைட்ல வாழைப்பூ வடையும் தயார் பண்றோம். இதை நிறைய பேரு விரும்பி வாங்கி சாப்பிடுவாங்க’’ என முகத்தில் புன்னகைபூக்க கூறி முடித்தார் கீதா. “ காலை 7 மணிக்கே டிபன் ரெடியாகிடும். வேலைக்கு போறவங்க. ஸ்கூல் போற பிள்ளைகளுக்கெல்லாம் சாப்பாடு வாங்கிட்டு போவாங்க. இங்க நிறைய பேரு சாப்பிட வருவாங்க. அதேபோல பார்சலும் நிறைய பேரு வாங்குவாங்க. உடலுக்கு தீங்கு தருகிற எந்தப் பொருட்களையும் நாங்க சேக்குறது இல்ல. இதனால் இங்க வரவங்க நம்பி வாங்கி சாப்பிடுறாங்க. மறுபடி எங்களோட கஸ்டமரா மாறிடுறாங்க. இதனாலதான் இதே இடத்துல இந்தக்கடைய நடத்த முடியுது. மதிய நேரத்தில 11.15 மணிக்கு வெரைட்டி சாதம் தயாராகிடும். 2.30 மணி வரைக்கும் சாப்பாடு இருக்கும். நைட் டிபன் 7.15ல இருந்து கிடைக்கும். 10 மணி வரை கடை இருக்கும். நாங்க தயார் பண்ற உணவைத்தான் நாங்களும் சாப்பிடுறோம். எங்க பிள்ளைங்களுக்கு கொடுக்குறோம். இந்த சாப்பாடு பிடிச்சி போயி, பலர் வீட்டு விசேசத்துக்கு, பார்ட்டிக்கு ஆர்டர் கொடுப்பாங்க. அவங்களுக்கும் தரமான சாப்பாட்டை சமைச்சு கொடுப்போம். இதனால இந்த ஓட்டல் தொழில் மத்தவங்களுக்கு நல்ல சாப்பாட்டைக் கொடுக்குது. எங்களுக்கு நல்ல சாப்பாட்டைக் கொடுக்குது’’ என நெகிழ்ச்சியும் பேசி முடித்தார் பூபாலன்.

– அ.உ.வீரமணி
படங்கள்: அருண்

குடை மிளகாய் சாதம்

தேவையான பொருட்கள்

சாதம் – 2 கப்
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
(நெய்யில் வறுத்தது)
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
துருவிய தேங்காய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருக வைக்க வேண்டும். இவை உருகியதும், சீரகம், கடுகு ஆகியவற்றை சேர்த்து தாளிப்பு செய்ய வேண்டும். அதன்பிறகு பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட்டைச் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். வதங்கிய பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை சிம்மில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் சாதம் மற்றும் முந்திரிப் பருப்பைப் போட்டு, 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக தேங்காயை சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான, கமகம குடைமிளகாய் சாதம் தயார்.

 

The post வீட்டுச்சுவையில் வெரைட்டி சாதம்! appeared first on Dinakaran.

Tags : Variety in housing ,Rice ,Variety Rice ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...