×

1,340 பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்

சேலம், ஆக. 17:சேலம் மாவட்டத்தில் உள்ள 1,340 பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் 54 தொடக்கப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக 24 தொடக்கப் பள்ளிகளிலும் என மொத்தம் 78 பள்ளிகளில் 6,743 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 1,340 அரசு பள்ளிகளில் பயிலும் 83,291 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் விவரம், சமையலறைக் கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு போன்றவை இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார். இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், ஆர்டிஓ லோகநாயகி, சிஇஓ கபீர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழரசி, மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி) சுகந்தி உள்பட பலர் கலந்து கெண்டனர்.

The post 1,340 பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Collector ,Karmegam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!