×

குளத்தூர் பகுதி கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்டு மறியல் போராட்டம் பள்ளி மேலாண்மை குழு அறிவிப்பு

குளத்தூர், ஆக. 17: குளத்தூர் பகுதி கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி கேட்டு பள்ளி மேலாண்மை குழு சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. குளத்தூர் அருகே உள்ள த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், கு.சுப்பிரமணியாபுரம், முத்துராமலிங்கபுரம் ஆகிய கிராமங்கள், குளத்தூரில் இருந்து சுமார் 4 முதல் 8 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொடக்க கல்வி வகுப்புகளை முடித்து மேல்நிலை கல்வியை அருகிலுள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளிக்கு வந்து செல்ல கிராமங்களில் இருந்து பஸ் வசதி என்பது அறவே கிடையாது. ஒரு சில மாணவர்கள் பெற்றோருடன் பைக்கில் வந்துவிட்டு செல்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் உப்பளத்தொழில் மற்றும் விவசாய கூலித் தொழில் செய்பவர்களாகவே உள்ளனர். இதன் காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து விட முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இதன் காரணமாக கிராமங்களில் இருந்து பள்ளிக்கு மாணவர்கள் நடந்தே வந்து செல்கின்றனர். பல கிமீ தூரம் நடந்தே வருவதால் மாணவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு பாடத்தில் கவனம் செலுத்த சிரமப்பட்டு பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

எனவே பள்ளி மாணவர்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பல முறை கிராம பகுதிகளுக்கு பஸ் வசதி செய்து தர மனுக்கள் அளித்த போதும் அதிகாரிகள் இதுவரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்தபாடில்லை. மேலும் கு.சுப்பிரமணியாபுரம் கிராமத்திற்கு தூத்துக்குடியில் இருந்து வரும் டவுன் பஸ்சும் வாரத்திற்கு 3 அல்லது 4 தினங்களே வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் குளத்தூர் அரசு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அருகிலுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர அரசு அதிகாரிகளை வலியுறுத்தும் விதமாக சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

The post குளத்தூர் பகுதி கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்டு மறியல் போராட்டம் பள்ளி மேலாண்மை குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School management committee ,Kulathur ,Kulatur ,Dinakaran ,
× RELATED மரக்கன்று நட இடம் தேர்வு