×

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க கடற்கரையில் மக்கள் குவிந்தனர்

நாகப்பட்டினம், ஆக.17: ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் திதி கொடுத்தனர். ஒவ்வொரு மாதமும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினமும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. இதில் தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடி அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து ஆசிகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். அதன்படி நேற்று நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஏராளமானவர்கள் கடலில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதிகொடுத்தனர்.அதே போல் காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எல்,நவதானியம், பிண்டம் வைத்து திதி கொடுத்து கடலில் புனித நீராடினர்.

அதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைபகுதிகளிலும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கடலில் நீராடினர். ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கடல்கரையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் குழும போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் ஆண்டு தோறும் தை, ஆடி மாத அமாவாசை, அர்த்தோதயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களை வழிபடுவர். அதே போல் நேற்று ஆடி அமாவாசைக்குசூரிய உதயத்தின் போது கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் தேங்காய், வெற்றிலைபாக்கு, எலும்பிச்சைபழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர்.

பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ள மணிகர்ணன் திருத்தத்தில் புனித நீராடி பின்பு வேதாரண்யேஸ்வர ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கமலா அன்பழகன், நகர மன்ற தலைவர் புகழேந்தி, கோடியகரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலய செயல் அலுவலர் அறிவழகன், தீயணைப்பு நிலைய அதிகாரி அம்பிகாபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்கு சென்று வழிபட்டதாக காவிரி மகாமத்யம் என்ற நூல் விளக்குகிறது. (நேற்று) ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே தமிழகம் முழுவதிலிருந்து பூம்புகாரருக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் வருகை புரிந்து காவேரி மற்றும் கடலில் புனித நீராடி தனது மூதாதைய நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். சுமங்கலி பெண்கள் எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு தேங்காய் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காவிரியில் இட்டு வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் போலீசார் கடலோர காவல்படை போலீசார் மற்றும் சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில் சுற்றுலா ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

The post ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க கடற்கரையில் மக்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam district ,Aadi Amavasai ,Adi Amavasi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்