×

சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் -2023 டிசம்பர் 9, 10ஆகிய தேதிகளில் நடைபெறும்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் -2023 டிசம்பர் 9 மற்றும் 10 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸின் வராலாற்றில் சிறப்பு நிகழ்வாக பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலை நகரான சென்னையில் “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிக்கான அறிமுகக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தலைமையில் சென்னை லீலா பேலஸில் இன்று (16.08.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” போட்டியினை அறிமுகப்படுத்திய அமைச்சர் சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் -2023 டிசம்பர் 9 மற்றும் 10 – ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் ஆகியவை சென்னை தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றி 3.5 கி.மீ சுற்றளவில் இரவு போட்டியாக (Street Circuit) நடத்தப்படுகிறது. இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பாலின சமத்துவத்தின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக. ரூபாய் 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்றுகின்ற வகையில், அனைத்து முன்னெடுப்பு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டுத் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தீவிர நடவடிக்கையினால் உலகமே வியக்கும் வண்ணம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மாணவ மாணவிகள், இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள், அனைவரும் பங்கேற்கின்ற வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- 2023 சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. மேலும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை-2023 போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக அக்டோபர் மாதத்தில் சைக்ளோத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளும் தொடர்ச்சியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

இந்த அறிமுக கூட்டத்தில் அமைச்சர் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பார்முலா ரேஸ் (RPPL) அமைப்பினருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு தலைவர் அக்பர் இப்ராஹிம் அவர்கள் RPPL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அகிலேஷ் ரெட்டி அவர்கள், RPPL இயக்குநர்களான அர்மான் இப்ராஹிம் மற்றும் அபிநந்தன் ஆகியோர் பங்கேற்றனர்

The post சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் -2023 டிசம்பர் 9, 10ஆகிய தேதிகளில் நடைபெறும்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Formula Racing Circuit-2023 ,Chennai ,Minister ,Udhayanidhi ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்