×

சக மனிதனை மதித்து நட்புறவோடு வாழும்: அனைவருக்கும் உயரிய நிலை கிடைக்க வேண்டும்; கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் சுதந்திர தின வாழ்த்து

தஞ்சாவூர், ஆக. 15: சக மனிதனை மதித்து நட்புறவோடு வாழும் அனைவருக்கும் உயரிய நிலை கிடைக்க வேண்டும் என்று கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு வாழ்த்து செய்தி வருமாறு:- நமது இந்தியத்தாயின் 77-வது சுதந்திர தினத்தையும் 348 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் காமராஜ் சாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவையும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். நமக்கு நாமே நமது நலனுக்காகவும் பிறரின் நலனுக்காகவும் சில தியாகங்களை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் ஒவ்வொரு மனிதனின் தன்னிகரில்லா தன்மானத்தையும் சுயமரியாதையையும் பேணி காப்பதோடு பிறரின் உரிமைகளையும் மதித்து நடப்பது தான் சுதந்திரமான வாழ்வாகும்.

பிறரின் அடிப்படை உரிமைகளை பேணிக்காப்பதும் மதிப்பதும் தற்கால சூழ்நிலையில் நம் அனைவருக்கும் மிகமிக அவசியம். மனித மாண்பை காப்பாற்றுவதில் எந்த சுயநல போக்கிற்கும் வகுப்புவாத சக்திகளுக்கும் இடமில்லை. இதைத்தான் தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்புசெய் என்று இயேசு சொல்வதில் புரிந்துகொள்கிறோம். அடிப்படையில் நாம் அனைவரும் மனித மாண்பில் எந்தவித வேறுபாடின்றி சமமானவர்கள். நாம் பல சமயங்களில் அணிந்து வலம் வரும் சமுதாய அல்லது மத அடையாளங்கள் இந்த அடிப்படையான சமத்துவத்தை நம்மிடையே வளர்த்தெடுக்க உதவியாக இருக்கவேண்டுமே தவிர பிரிவினைகளுக்கு வித்திடக்கூடாது.

நாட்டில் அனைவருக்கும் இல்லாமை மறைந்து அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்று சக மனிதனை மதித்து நட்புறவோடு வாழும், உயரிய நிலை கிடைக்க இந்நாளில் வாழ்த்துகிறேன். இதை நமது இந்திய தாயும் உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்ட நமது அன்னை கன்னிமரியாவும் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க உங்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

The post சக மனிதனை மதித்து நட்புறவோடு வாழும்: அனைவருக்கும் உயரிய நிலை கிடைக்க வேண்டும்; கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் சுதந்திர தின வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Kumbakonam Diocese ,Thanjavur ,Kumbakonam ,Diocese ,Episcopal ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...