க.பரமத்தி, ஆக. 15: க.பரமத்தி ஒன்றியம், குப்பம் ஊராட்சி பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் நேற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். க.பரமத்தி ஒன்றியம், குப்பம் ஊராட்சி பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, குப்பம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள பகுதியில் காவிரி குடிநீர் சேகரிப்பு மற்றும் நீருந்து நிலைய தொட்டியில் நீரை சேகரித்து அதில் இருந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு நீர் நிரப்பி அந்தந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக க.பரமத்தி முதல் நொய்யல் வரை நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் குப்பம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் இன்னும் குடிநீர் குழாய்கள் சீரமைக்கவில்லை. மேலும், இப்பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிகள் வசம் ஊராட்சி நிர்வாகத்தை ஒப்படைத்து, மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று (ஆக.14) போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்த திரண்டனர். இதை அறிந்த அதிகாரிகள், கிராம மக்களை அழைத்து, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி, தனி வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், வீஏஓ கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post குப்பம் ஊராட்சியில் பொதுமக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் appeared first on Dinakaran.
