×

மும்பையில் 3வது ஆலோசனை கூட்டம் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்?: 11 பேர் குழு, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

புதுடெல்லி: ‘இந்தியா’ கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், அதன் ஒருங்கிணைப்பாளர், 11 பேர் குழு அமைத்தல், ஓட்டுப்பதிவு இயந்திர விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவுற்ற நிலையில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான அடுத்தகட்ட போருக்கு, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கட்சிகள் தயாராகி வருகிறது. அதாவது, நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்த பரிசீலிக்கப்படுகிறது. இம்மாதம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள் கூறுகையில், ‘மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அடுத்த லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு வழிகளில் முறைகேடு செய்யும் முயற்சியை பாஜக தொடங்கியுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சமீபத்தில் கூறினார். வாக்குப்பதிவு இயந்திர தொழில்நுட்பத்தில் குளறுபடி ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, இடது சாரிகள் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்தக் குழுவில் கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல்), சீதாராம் யச்சூரி (மா.கம்யூ) ஆகியோர் இடம்பெறலாம். மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் மும்பையில் நடக்கும் விரிவான ஆலோசனைக்கு பிறகுதான் ஒருங்கிணைப்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இவ்விவகாரத்தில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் தான், ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்பதை இறுதிசெய்ய முடியும்’ என்று கூறினர்.

The post மும்பையில் 3வது ஆலோசனை கூட்டம் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்?: 11 பேர் குழு, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,India' alliance ,New Delhi ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்