×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

548. கஹனாய நமஹ (Gahanaaya Namaha)

நான்கு நண்பர்கள் காட்டு மார்க்கமாகப் பயணித்தார்கள். நடுவில் ஒரு கல் பாறை அவர்களை தடுப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அது என்னவாக இருக்கும் என அவர்களுக்கு ஆர்வம். ஆனால், இருட்டில் அடர்ந்த காட்டில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.முதல் நண்பர் மெதுவாகப் பாறையைத் தடவிப் பார்த்து இது தூணாக இருக்கும் எனக் கூறினார். இரண்டாவது நண்பர் பக்கவாட்டில் தடவிப் பார்த்து இது முறம், முறத்திற்குச் சிலை வைத்துள்ளனர் எனக் கூறினார்.

முன்றாவது நபரோ இது கல் பாறை எனப் புரிந்துக் கொள்கிறேன் என்றார். நான்காவது நபரோ ஏதோ குச்சி நட்டு வைத்துள்ளனர் என்றார். இப்படியே நால்வர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை விடிந்த பிறகு இது என்ன என்பதை உறுதி செய்துவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என முடிவு செய்தனர்.

சூரிய ஒளி வந்தவுடன் அங்கே ஒரு யானை சிலை தென்பட்டது. முதல் நபர் தும்பிக்கையைத் தடவிப் பார்த்துள்ளார். இரண்டாவது நபர் யானையின் காதுப் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். முன்றாவது நபர் யானையின் உடல் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். நான்காவது நபர் வால் பகுதியை தடவிப் பார்த்துள்ளார். அதனால் அவர்களுக்கு முறையே தூண், முறம், பாறை, குச்சி என வெவ்வெறாகத் தெரிந்துள்ளது.

நால்வரும் அவர்கள் பார்வையிலிருந்து சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொன்னதுதான் சரி என வாதிட்டதுதான் இங்கே தவறு. இதே போல் பகவானை இவர் தான் பகவான் என வரையறுக்க முடியாது. அவர் எண்ணில் அடங்காத மங்கல குணங்களைக் கொண்டவர். ராமாநுஜர் கத்ய த்ரயத்தில் எண்ணில் அடங்காத மங்கல குணக் கூட்டங்களின் கடல் என்று பெருமாளைக் குறிப்பிடுகிறார்.

இத்தனைக் குணங்களையும் நம்மால் அனுபவிக்க முடியாது. எதேனும் ஒரு குணத்தையோ ஒரு சில குணங்களையோ மட்டும் அனுபவித்து, அவ்வளவு தான் பகவான் என நம்மால் அவரை ஓர் எல்லைக்குள் சுருக்கி விட முடியாது. நேதி நேதி என்ற பிருகதாரண்யக உபநிஷத் வாக்கியம், இதுவரை நான் சொன்னது மட்டும் தான் இறைவனின் பெருமை என்று நினைத்து விடாதே, இன்னமும் அவனிடம் எவ்வளவோ பெருமைகள் உள்ளன என்று சொல்கிறது என்று ராமாநுஜர் பாஷ்யத்தில் விளக்குகிறார்.

நமக்கு எப்படி பகவானை அனுபவிக்க பகவான் வழி காண்பித்துள்ளானோ அதன்படி நாம் பகவானை அடைவதற்கான வழியில் செல்ல வேண்டும். மற்றவரையோ, மற்ற மத்தையோ நாம் தவறு என சொல்ல நமக்கு உரிமை இல்லை. ஏனெனில், அவரவரின் பக்குவத்துக்கு ஏற்றபடித் தன்னை ஒவ்வொருவருக்கும் பகவான் வெளிப்படுத்திக் காட்டுவார். ஆனால், இவ்வளவு தான் என்ற ஒரு வரையறைக்குள்ளே அவர் என்றுமே அடங்காதவர்.

அதனால்தான் திருமால் கஹன என்று அழைக்கப்படுகிறார். கஹன என்றால் இவ்வளவுதான் என அறிய முடியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 548-வது திருநாமம்.
கடலின் ஆழத்தில் நமக்குச் சில செடிகள் தெரியும். அதற்காக அவ்வளவு தான் கடலின் ஆழம் எனக் கூற முடியாது. அதுபோல் இறைவனின் பெருமையின் ஆழத்துக்கும் எல்லையே இல்லை.
கஹனாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத பல விஷயங்களிலும் நமக்குத் தெளிவு ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

549. குப்தாய நமஹ (Gupthaaya Namaha)

எட்டெழுத்து மந்திரமாகிய திருமந்திரம், இரண்டு வரி மந்திரமாகிய துவயம், கண்ணன் கீதையில் சொன்ன சரம ஸ்லோகம் ஆகிய மூன்று ரகசியங்களின் ஆழ்பொருளைத் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் அறிய விழைந்தார் ராமாநுஜர்.இவ்வரும்பொருளை அறிவதற்காகப் பல முறை திருக்கோஷ்டியூருக்கு ராமாநுஜர் சென்ற போதும், அவருக்குத் திருக்கோஷ்டியூர் நம்பி அவ்வளவு எளிதில் உபதேசிப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ராமாநுஜரைத் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தார்.

இதைத் திருக்கோஷ்டியூரில் உள்ள சில அடியார்கள் கவனித்தார்கள். ராமாநுஜரிடம் சென்று, சுவாமி, உங்களுக்கே இது கிடைப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால், இந்த அர்த்தங்களை நாங்கள் எப்படி அறிந்து உய்வது என்று வருந்திச் சொன்னார்கள்.அதற்கு ராமாநுஜர், ஆசார்யன் கருணை உள்ளவர். எப்படியும் உபதேசம் செய்யாமல் இருக்க மாட்டார். அதற்கு முன் அடியேனின் தகுதியை நன்கு ஆராய விழைகிறார். எனவே நாம் அதற்கு உட்பட்டுத் தான் ஆகவேண்டும். எனினும், அடியேனுக்கு அந்த அர்த்தம் கிடைத்தால் அவசியம் உங்களுக்கும் உபதேசம் செய்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.

பலமுறை திருவரங்கத்துக்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடந்த ராமாநுஜருக்கு, பதினெட்டாவது முறை திருக்கோஷ்டியூர் நம்பி உபதேசம் செய்தார். முக்கியமாக, கீதையின் சரம ஸ்லோகமான – ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: – என்ற ஸ்லோகத்தின் ஆழ்பொருளை உபதேசித்தார். இறைவனை அடைவதற்கு வேறு எதுவுமே வழி இல்லை என்று உணர்ந்து இறைவனின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்ற வேண்டும். அப்படி சரணாகதி செய்தவரின் அனைத்துப் பாபங்களையும் இறைவனே போக்கி அவர்களுக்கு முக்தி அளிப்பார் என்பது இதன் ஆழ்பொருள்.

மேற்கூறிய மந்திரங்களின் உபதேசம் எல்லாம் முன்பே மதுராந்தகத்தில் பெரிய நம்பிகளிடம் ராமாநுஜர் பெற்றதால், பிரபலமாக இதுகுறித்துச் சொல்லி வரப்படும் கதை அவ்வளவு தூரம் பொருத்தமாக இல்லை. அதிகாரப் பூர்வமான குரு பரம்பரை நூல்களில் சொல்லப்பட்ட விஷயமே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பொருளைப் பெற்ற ராமாநுஜர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள தெற்காழ்வான் சந்நதிக்கு வந்தார். சில அடியவர்களுக்கு ரகசியப் பொருளை உபதேசிப்பதாகச் சொல்லி இருந்தார் அல்லவா, அதன்படி அவர்களுக்கு உபதேசமும் செய்து விட்டார் ராமாநுஜர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, குருவின் வாக்கை மீறி நீ தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் அர்த்தங்களைச் சொல்லி விட்டாய் ராமாநுஜா. உனக்கு இனி நரகம் தான் என்று சொன்னார்.அதற்கு ராமாநுஜர் பணிவோடு, சுவாமி, அடியேன் தகுதி இல்லாதவர்க்குச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் குலம், பாலினம், ஞானம் போன்றவற்றைத் தகுதியாகக் கருதாமல், ஆசையையே தகுதியாகக் கொண்டு உபதேசம் செய்தேன். மேலும், அடியேன் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை. நீங்கள் சொன்ன அர்த்தங்களைக் கேட்டு இவர்கள் அத்தனை பேரும் முக்தி பெறப் போகிறார்களே. இத்தனை பேர் முக்தி பெறுவதற்காக நான் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை என்றார்.

ராமாநுஜரின் கருணையைக் கொண்டாடிய திருக்கோஷ்டியூர் நம்பி, எம்பெருமானாரே என்று அவரை அழைத்து ராமாநுஜரின் பரந்த மனதைப் பாராட்டினார்.இப்படி ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்தாலும், இறைவன் மீது பொறாமை கொண்டோர், அதர்மச் செயல்களில் ஈடுபடுவோர், இறைவனைப் பழித்துப் பேசுவோர் போன்றோருக்கு உபதேசிக்கக் கூடாது என்பது ராமாநுஜரின் கருத்தாகும். ஆசை என்ற தகுதி இல்லாதவர்களிடமிருந்து இறைவனைப் பற்றிய விஷயங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பது ராமாநுஜர் வழிவந்த ஆசார்யர்களின் கொள்கை.

இப்படி பூர்வாசார்யர்களாலே பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் திருமால் குப்த என்று அழைக்கப்படுகிறார். குப்த என்றால் தகுதி இல்லாதோரிடம் இருந்து பாதுகாக்கப் பட்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 549-வது திருநாமம்.குப்தாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், இறைவன் மீது நமக்கு ஆசை பெருகும்படி அவரே நமக்கு அருள்புரிவார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Saffron Spirituality ,Kahanaya ,Namaha ,Gahanaya Namaha ,Anandan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!