×

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.87.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.87.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 87 கோடியே 76 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், விடுதிகள், ஆராய்ச்சி மையம், கருத்தரங்குக்கூடம் மற்றும் செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

அந்த வகையில், வேலூர் – தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 150 மாணவர்கள் தங்கும் வகையில் 8 கோடியே 43 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம்;
கோயம்புத்தூர் – அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்; திருப்பூர் – எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சிதிலமடைந்துள்ள முதன்மை கட்டடத்திற்கு மாற்றாக 10 கோடியே 94 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம்.

கோயம்புத்தூர் – பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள நவீன அறிவியல் ஆய்வகக் கட்டடத்தின் மேல்பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் தளங்கள் மற்றும் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகாகவி பாரதியார் ஆராய்ச்சி மையம்; நாமக்கல் – என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; புதுக்கோட்டை – மாமன்னர் கல்லூரியில் 3 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்.

காரைக்குடி – அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 159 மாணவர்கள் தங்கும் வகையில் 8 கோடியே 36 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதிக் கட்டடம்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மனிதவள மேம்பாட்டு மையத்திற்கான கருத்தரங்குக் கூடம்; திருநெல்வேலி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கீழநத்தம் கிராமம், சீவலப்பேரி சாலையில் 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொலைதூரக் கல்வி மற்றும் தொடர்நிலை கல்வி இயக்ககத்திற்கான கல்வி வளாகக் கட்டடம்.

திருநெல்வேலி – அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 60 மாணவர்கள் தங்கும் வகையில் இரண்டாவது தளத்தில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதிக் கட்டடம்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஸ்ரீரங்கம், சேலம், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மதுரை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 23 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள்; திருச்சிராப்பள்ளி, அண்ணா அறிவியல் மையக் கோளரங்கத்தில் 3 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட எண்ணிலக்க முழுக்கோள அமைப்பு கோளரங்கம்; என மொத்தம் 87 கோடியே 76 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வினய், இ.ஆ.ப., கல்லூரி கல்வி இயக்குநர் (மு.கூ.பொ) முனைவர் கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உயர்கல்வித் துறை சார்பில் ரூ.87.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.D. ,Higher Education Department ,G.K. Stalin ,Chennai ,Mukheri ,Department of Higher Education ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...