×

மூணாறு அருகே வீடு புகுந்து கொள்ளை முயற்சி தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

மூணாறு, ஆக. 14: கேரள மாநிலம், மூணாறு அருகே மறையூரை சேர்ந்தவர் சதீசன் (35). இவருக்கு லேகா (30) என்ற மனைவியும், கவிஜித் (6) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு சதீசன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர், பீரோவில் இருந்து தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்றார். சத்தம் கேட்டு சதீசன், மனைவி லேகா எழுந்து பார்த்தனர். அப்போது, வீட்டிற்குள் ஒருவர் புகுந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள், அந்த நபரை பிடிக்க முயன்றனர். அந்த நபர், தம்பதியை கட்டையால் தாக்கிவிட்டு நகைகளை எடுத்து கொண்டு ஓட முயன்றார்.

ஆனால் அவர்கள், அந்த நபரை விடாமல் கடுமையாக போராடினர். அப்போது, சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் சதீசன் வீட்டிற்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும், அந்த நபர் நகைகளை போட்டுவிட்டு தப்பியோடி ஓடிவிட்டார். கொள்ளையன் தாக்கியதில் சதீசன், லேகாவிற்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இடுக்கி மாவட்ட காவல் ஆய்வாளர் வி.யூ குரியகோஸ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த முப்படாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (33), தென்காசி செம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (23), மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த திலீப் (23), சிவகங்கை திருப்பத்தூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி ஹைதரலி (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post மூணாறு அருகே வீடு புகுந்து கொள்ளை முயற்சி தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Munnar ,Satheesan ,Kaiyur ,Munnar, Kerala ,Lekha ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...