×

பள்ளிகளில் சாதிய பிரச்னைகளை கண்டறிந்து களையெடுக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

 

ேவலூர், ஆக.14: பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் சாதிய ரீதியான உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பணியில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் ஈடுபட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் பெரும்பாலும் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் சாதிய உணர்வு மேலோங்கி இருப்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டுள்ளது. இது பல நேரங்களில் மாணவர்கள், ஆசிரியர்களிடையிலான சாதாரண மோதலாகவே கருதப்பட்டு வந்தது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே ஒருசில பள்ளிகளில் இதுபோன்ற சாதிய பிரச்னைகள் தலைதூக்கியது. ஆனாலும் அப்பிரச்னைகள் நீறுபூத்த நெருப்புபோல் உள்ளது.

இப்பள்ளிகளில் சாதி அமைப்புகளின் நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடுகளே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என்றும், அவர்கள் வருகையை தடுத்து நிறுத்தினாலே பல பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்றும் கல்வியாளர்களும், ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாங்குனேரியில் நடந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். அதேபோல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், ‘பள்ளிகளில் சாதிய உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த விவரங்களை அறிந்து அதை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

The post பள்ளிகளில் சாதிய பிரச்னைகளை கண்டறிந்து களையெடுக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Yevalur ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...