×

வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை காக்க திருப்பதி மலைப்பாதையில் விரைவில் கூண்டுப்பாலம்: தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் காரணமாக, விரைவில் கூண்டுப்பாலம் அமைப்பது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் கடந்த ஜூன் மாதம் பெற்றோருடன் நடந்து சென்ற சிறுவன் ஒருவனை சிறுத்தை கவ்விச்சென்றது. சிறிது நேரத்தில் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலைப்பாதை வழியாக சென்ற 6 வயது சிறுமியை ஏதோ வனவிலங்கு கவ்விச்சென்று கொன்றுள்ளது. சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்றதா அல்லது கரடி கொன்றதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இதுபற்றி முழுமையாக தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு வனத்துறையினருடன் தேவஸ்தான உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

அப்போது, அலிபிரி மலைப்பாதையில் இருந்து திருமலை வரை கூண்டுப்பாலம் அல்லது பசுமைப்பாலம் அமைப்பது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘பக்தர்கள் செல்லும் பாதையை வனவிலங்குகள் கடந்து செல்லும் வகையில் கூண்டுப்பாலம் அமைப்பது குறித்து ஆலோசித்தோம். இந்த பாலம் அமைப்பதால் பக்தர்களுக்கு வனவிலங்குகளால் எவ்வித தொந்தரவும் ஏற்படாது. அதேபோல், வனவிலங்குகளும் கூண்டுப்பாலத்தின் மீது ஏறி மற்றொரு பகுதியை கடக்கும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக மீண்டும் ஆலோசித்து அதன்பிறகு திட்டம் தொடர்பாக அறிவிக்கப்படும். இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய, மாநில வனத்துறையினரிடம் பேசி, அவர்களது அனுமதி கிடைத்ததால் இந்த திட்டம் விரைந்து செயல்படுத்துவோம்’ என்றனர்.

The post வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை காக்க திருப்பதி மலைப்பாதையில் விரைவில் கூண்டுப்பாலம்: தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Goondupalam ,Tirupati hill pass ,Devasthanam ,Tirumala ,Tirupati mountain pass ,Devasthanam administration ,
× RELATED தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு...