×

பள்ளிப்பட்டு அருகே நீதிமன்ற உத்தரவுப்படி முதியவரின் சடலம் தோண்டி எடுத்து அடக்கம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே 130 நாட்களுக்கு பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு முதியவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, அங்குள்ள மயானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி ஊராட்சி, விஜயமாம்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மலு நாயுடு என்ற முதியவர், கடந்த ஏப்ரல் 2ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது சடலத்தை உறவினர்கள், அங்குள்ள மற்றொரு உறவினரின் விவசாய நிலத்தில் போலீசாரின் எதிர்ப்பை மீறி புதைத்துவிட்டனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே பகுதியை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, ஒருவரின் பட்டா நிலத்தில் சடலத்தை புதைக்க அனுமதிக்க முடியாது. பஞ்சாயத்துராஜ் சட்டப்படி மயானத்தில் மட்டுமே சடலத்தை புதைக்க வேண்டும். எனவே, விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து, அங்குள்ள மயானத்தில் மீண்டும் புதைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறந்துபோன முதியவர் நரசிம்மலு நாயுடுவின் மனைவி உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரம், நீதிமன்ற கால அவகாசம் முடிந்தும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று மாவட்ட ஆட்சியர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் முன்னிலையில், டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரின் பலத்த பாதுகாப்புடன், விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் நரசிம்மலு நாயுடவின் சடலத்தை 130 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அந்த சடலத்தை அங்குள்ள மயானத்தில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பள்ளிப்பட்டு அருகே நீதிமன்ற உத்தரவுப்படி முதியவரின் சடலம் தோண்டி எடுத்து அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!