×

13,210 அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் வானவில் மன்றத்திற்கு 710 கருத்தாளர்கள் ஒதுக்கீடு: விவரங்களை சரிபார்க்க உத்தரவு

சேலம்: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை, மாணவர்கள் தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக, வானவில் மன்றம் எனப்படும் நடமாடும் அறிவியல் ஆய்வக திட்டத்தை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 13,210 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று வரும் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கருத்தாளர்கள் விவரத்தை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் வானவில் மன்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் விவரங்கள் சரிபார்க்கும் பணி எமிஸ் தளத்தில் நடந்து வருகிறது. மேலும் புதிதாக சேர்ந்துள்ள அனைத்து கருத்தாளர்களுக்கும் புதிய உள்நுழைவு ஐடி வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய கருத்தாளர்களுக்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஏற்கனவே பணிபுரியும் கருத்தாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை சரிபார்க்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணியினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து மாவட்ட வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து சரிபார்த்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாளை (14ம் தேதி) காலை 10 மணி அளவில் மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட வாரியாக அனைத்து கருத்தாளர்களின் உள்நுழைவு ஐடி அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டம், வட்டாரம், பள்ளி ஐடி, பள்ளியின் பெயர், கருத்தாளர்கள் ஐடி, கடவுச்சொல், செல்போன் ஆகியவை அடங்கிய கருத்தாளர்களின் விவரங்களை தயார் செய்ய வேண்டும்.

முதற்கட்டமாக அனைத்து வானவில் மன்ற கருத்தாளர்களின் ஐடி செயல்பாட்டில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். அவ்வாறு செயல்பாட்டில் உள்ளவர்களுக்கு, பள்ளிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேசமயம், ஐடி செயல்பாட்டில் இல்லாவிட்டால், மாநில திட்ட இயக்கத்தை தொடர்பு கொண்டு புதிய ஐடியை பெற்று, கருத்தாளருக்கு பள்ளிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அனைத்து வானவில் மன்ற கருத்தாளர்களுக்கும் இதே முறையில் எமிஸ் தரவு தளத்தில் உள்நுழைந்து, பள்ளி பார்வை விவரங்கள் தொடர்பாக உரிய பதிவுகளை மேற்கொள்ளவும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை சரியாக பெற்று, மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்பாக பணிபுரியவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 13,210 அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் வானவில் மன்றத்திற்கு 710 கருத்தாளர்கள் ஒதுக்கீடு: விவரங்களை சரிபார்க்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : rainbow forum ,Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...