×

இந்தோனேஷியாவின் சுமத்ராவில் இருந்து சென்னைக்கு தினசரி நேரடி விமான சேவை: நேற்றிரவு முதல் துவக்கம்

மீனம்பாக்கம்: இந்தோனேஷியா நாட்டின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு முதல் தினசரி நேரடி விமான சேவை துவங்கப்பட்டு உள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்தோனேசியா நாட்டில் வடக்கு சுமத்ரா மாகாணம் உள்ளது. இது, அங்கு சுமத்ரா தீவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்திய பெருங்கடலும் வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீர் அணையும் அமைந்துள்ளது. இந்த வடக்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகர் மேடான். இப்பகுதி இயற்கை அழகு நிறைந்த சுற்றுலாத்தலம் என்பதால், இங்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா நகரில் ஏராளமான திரைப்பட படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன.

எனினும், இந்த பிரபல சுற்றுலாத் தலமான இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே இதுவரை நேரடி விமானசேவை துவங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து இந்தோனேஷியாவின் பிரபல சுற்றுலாத் தலமான வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் வழியாக இணைப்பு விமானங்கள் மூலம் சென்று வந்துள்ளனர். இந்நிலையில், இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகர் மேடான் விமான நிலையத்தில் இருந்து, இந்தியாவின் சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு தினசரி நேரடி விமானசேவையை துவங்க பாத்திக் எனும் தனியார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி, இம்மாதம் முதல் தேதியிலிருந்து சென்னைக்கு தினசரி நேரடி விமான சேவையை துவங்க பாத்திக் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக, அச்சேவை 11ம் தேதிக்கு (நேற்று) மாற்றப்பட்டது.

முன்னதாக, இதே பாத்திக் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு சென்னை-இந்தோனேஷியா இடையே நேரடி விமான சேவையை நடத்தியுள்ளது. பின்னர் கடந்த 2020ம் ஆண்டு இச்சேவை திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சென்னை-இந்தோனேஷியா இடையே தினசரி நேரடி விமான சேவையை துவக்கியுள்ளது. இதன்படி, நேற்று மாலை வடக்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகர் மேடான் விமான நிலையத்தில் இருந்து 51 பயணிகளுடன் பாத்திக் ஏர்லைன்சின் விமானம் சென்னைக்கு புறப்பட்டது. நேற்றிரவு 9.45 மணியளவில் சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வரவேண்டிய பாத்திக் விமானம், ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணியளவில் வந்து சேர்ந்தது.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு வந்த முதல் விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் இதே பாத்திக் விமானம், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 43 பயணிகளுடன் மீண்டும் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மேடான் நகர விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் மேடான் விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகர் மேடானில் இருந்து சென்னைக்கு தினசரி நேரடி விமான சேவை மூலம் திரைப்படத் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என் சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post இந்தோனேஷியாவின் சுமத்ராவில் இருந்து சென்னைக்கு தினசரி நேரடி விமான சேவை: நேற்றிரவு முதல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sumatra, Indonesia ,Chennai ,Meenambakkam ,Indonesia ,North Sumatra ,Chennai International Airport ,Sumatra ,Dinakaran ,
× RELATED கிண்டி, மீனம்பாக்கத்தில் கோடை வெயில் உக்கிரத்தில் 2 இடங்களில் தீ விபத்து